தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலையில் திடீர் மாரடைப்பினால் காலமானார்.
அவரின் திடீர் மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதியன்று நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அந்த நிகழ்வை வீடியோ செய்தியாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பரப்புரையும் செய்திருந்தார்.
ஆனால் அதற்கடுத்த நாள் ஏப்ரல் 16-ம் தேதி காலை 10 மணிக்கு தனது வீட்டில் திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
விவேக்கை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே அவர் சுய நினைவுடன் இல்லை. மூளை இறந்து போன நிலையில்தான் இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினார். உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் மறுநாள் ஏப்ரல் 17-ம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
விவேக் கொரோனா தடுப்பூசி போட்டதினால்தான் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால் விவேக்கிற்கு நூறு சதவிகிதம் ரத்த சப்ளையே இல்லை என்பதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள்.. இது தடுப்பூசியினால் ஏற்பட்டதில்லை என்று விளக்கம் தெரிவித்தனர்.
இதனை அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு இந்தப் பிரச்சினையில் எந்தக் குழப்பமும் இல்லாமல் விவேக்கின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது.
ஆனாலும், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்த புகாரை தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இனி மாநில அரசு, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.