full screen background image

“3 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கேள்வியால்தான் இப்போது போட்டியிடுகிறோம்..” – நடிகர் விஷாலின் பேட்டி..!

“3 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கேள்வியால்தான் இப்போது போட்டியிடுகிறோம்..” – நடிகர் விஷாலின் பேட்டி..!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விஷால் அணியினர் தனி பஸ்சில் சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாடக நடிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்திருந்தனர். அதன்படி நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நேற்று சேலத்திற்கு வந்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். 

அப்போது நடிகர் விஷால் சேலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “நடிகர் சங்க தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தினரும், இயக்குனர்கள் சங்கத்தினரும் எங்களிடம் சமரசத்திற்கு வந்துள்ளனர். அவர்களின் முயற்சியை நான் மதிக்கிறேன். 

அதேநேரத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சமரசத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை. போட்டியில் இருந்து வாபஸ் பெற மாட்டோம். 18-ம் தேதி தேர்தல் கட்டாயம் நடக்கும். இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிக்க வாருங்கள். 

எங்கள் முடிவு இன்று எடுத்ததல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கேள்வியால் எடுக்கப்பட்டது. விஷால், கார்த்தியால் சங்கத்தை நடத்த முடியுமா என்கின்றனர். நானும் ஒரு தயாரிப்பாளர்தான். எங்களால் நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்த முடியும். எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைத்து நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தேர்தலில் போட்டியிடுகிறோம். நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கண்டிப்பாக  அதற்கான நடவடிக்கை எடுப்போம். 

தயாரிப்பாளர் சங்கம் முதல் அனைத்திற்கும் தேர்தல் நடக்கிறது. அதேபோல் நடிகர் சங்க தேர்தலும் நடக்க வேண்டும். அதேநேரத்தில் அனைத்து நடிகர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நான் ஒரு நடிகர். சங்கத்தில் உறுப்பினர் கார்டு வைத்துள்ளேன். அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறேன். 

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. தேர்தலில் அவர் வாக்களிக்க வந்தால் அதை விட பெரிய சந்தோஷம் எதுவும் எங்களுக்கு இல்லை. முதல்-அமைச்சர் வாக்களித்தால் வரலாற்றில் அது மறக்க முடியாத நிகழ்வாக அமையும்..” என்றார்.

முன்னதாக நடிகர் விஷால் அணியினர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்க கட்டிடத்திற்கு வந்தனர். பிறகு அவர்கள், கட்டிடத்தின் முன்புறம் இருந்த சங்கரதாஸ் சுவாமியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கார்காத்த வேளாளர் திருமண மண்டபத்தில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

Our Score