full screen background image

நடிகர் விமலின் நிஜ கல்யாணக் கதை..!

நடிகர் விமலின் நிஜ கல்யாணக் கதை..!

மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ நிறுவனம் திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளது. மலாய், சீன, தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழில் ‘அப்பளம்’ படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக ரீதியாக வெற்றியையும் பல விருதுகளையும் பெற்றது. இரண்டாவது படமாக ‘மைந்தன்’ தயாரித்துள்ளது. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார்.

‘மைந்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது. மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பாடல்களை வெளியிட்டார். இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் மலேசிய ஆஸ்ட்ரோ நிறுவன நிர்வாகத் துணைத் தலைவர் ராஜாமணி, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜகுமாரன், நடிகர் விமல், ஸ்ரீகாந்த், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் மன்ஷேர் சிங், நடிகைகள் ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர், ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம், நாகேந்திரன், மலேசிய என்.ஜி.பி. நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவநீதம் கணேசன், டத்தோ சாகுல் ஹமீது, நஜ்வா அபுபக்கர் ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பாடல்களை வெளியிட்டுப் பேசும் போது நடிகர் விமலின் கல்யாணம் பற்றிய ஒரு சுவையான செய்தியை வெளியிட்டார்.

IMG_9728

“இங்கே படக் கதாநாயகன் பேசும் போது ரஜினி, கமல் படம் பார்த்துதான் நான் வளர்ந்தேன் என்றார். என்னை தமிழ்த் திரையுலகின் பிதாமகன் என்றார். நான் இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் அது என் தனிமனித சாதனை அல்ல. எனக்குப் பின்னால் இருந்த குழுவின் சாதனை. போனதலைமுறை நடிகர்களையும் இயக்கினேன். இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் இயக்குவேன். நான் எதனால் சினிமாவில் நிலைக்க முடிந்தது என்றால், என் வெற்றியின் ரகசியம் வேறொன்றுமில்லை. நான் எல்லாரையும் அனுசரித்துப் போவதுதான்.

இங்கே விமல் வந்திருக்கிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைத்தது நான்தான். அவர் பிரியதர்ஷினி என்கிற பெண்ணைக் காதலித்தார் இரண்டு பேர் வீட்டுக்கும் இது தெரியாது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார் ரகசியமாக. நான் சவீதா கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போன போது அங்கு மாணவிகள் கிசுகிசுத்தார்கள். இது பற்றிப் பேசிய போது வெளியே தெரியக் கூடாது என்றார்கள். அப்படியா விஷயம் என்று இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்றேன். கொண்டு வந்தார்கள். அதே மேடையில் எல்லார் மத்தியிலும் விமலுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். எல்லாருக்கும் தெரிய வைத்தேன். அப்படி திருட்டுக் கல்யாணம் செய்த விமலுக்கு நான்தான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைத்தேன். இப்படி திருட்டு கல்யாண ஜோடி யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைக்கத் தயார்…” என்றார்.

இயக்குநர் எஸ்.பி.எம்.மின் இந்த பேச்சினை நடிகர் விமல் விரும்பவில்லை என்பது அவருடைய முகத்தில் இருந்தே தெரிந்தது.. இதையெல்லாமா போய் வெளில சொல்லணும்..? என்ற அவருடைய வருத்தத்தை அவரால் சொல்லவும் முடியவில்லை.. சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார்.. பாவம்.. அவர் நிலைமை அவருக்கு..!

Our Score