full screen background image

“இனிமேல் சிவகார்த்திகேயன்தான் ரெமோ..” – நடிகர் விக்ரமின் தன்னடக்கப் பேச்சு..!

“இனிமேல் சிவகார்த்திகேயன்தான் ரெமோ..” – நடிகர் விக்ரமின் தன்னடக்கப் பேச்சு..!

‘அரிமா நம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’. 

இந்தப் படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயனும், நிவின் பாலியும் கலந்து கொண்டனர்.

நடிகர் விக்ரம் இந்த விழாவில் பேசும்போது, “நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ்த் திரையுலகில் மென்மேலும் உயர்வார்..” என்று மனதார வாழ்த்தினார்.

irumugan audio launch (27) 

நடிகர் விக்ரம் தொடர்ந்து பேசும்போது, “எனக்கு நேற்றிரவு 3 மணிக்கும் தூக்கமே வரவில்லை. இந்த நிகழ்ச்சியை எண்ணி பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் காரணம்.

நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அது ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்குமா என்று பார்த்துதான் செய்வேன். அப்படித்தான் என் ஒவ்வொரு படத்தையும், கதையையும் அணுகுவேன். படம் பேசப்பட வேண்டும்; இந்தப் படமும் ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.

நான் மட்டுமல்ல.. இயக்குநர் ஆனந்த் சங்கரும் இந்தப் படத்துக்காக 9 மாதங்கள் காத்திருந்தார். இந்தக் கதை ஓகேயான பிறகு வேறொரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கவும் அவருக்கு வாய்ப்பு வாய்ப்பு வந்தது. அது தர்மமல்ல என்று எனக்காகக் காத்திருந்தார்.

நான் இதில் முதன்முதலில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த பாத்திரத்தை வேறொருவர் செய்வதாக இருந்தது. ஏன் நாமே செய்தால் என்ன என்று தோன்றியது. நடித்தேன்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் இளைஞர்தான். வயதில் சின்னவர்தான் ஆனால் முதிர்ச்சியோடு செயல்படுபவர். தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் துணிச்சல்காரர். நயன்தாரா, நித்யா மேனன் என்று பெரிய நடிகைகளை என்னுடன் நடிக்க வைத்து இந்தப் படத்தை பெரிதாக்கிவிட்டார். ஹரியை வைத்து ‘சாமி-2’  படத்தை அவரே தயாரிக்கவும் தயாராகிவிடடார்.

ஹரரிஸ் ஜெயராஜ் எனக்கு எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அந்த ‘மூங்கில் காடுகளே’ எனக்குப் பிடித்த ஒன்று. இன்றும் அது என் போனில் ஒலிக்கிறது. இதில் பாடல்களை அருமையாக கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அருமை. இதில் நான் நடிக்கும் இரண்டாவது பாத்திரத்தின் பெயர் ‘லவ்’ என்பது. அதற்கும் ஹாரிஸ் நன்றாக இசையமைத்துள்ளார்.

ஆர்.டி. டிராஜசேகர் ‘பீமா’வை போலவே இதிலும் தன் ஒளிப்பதிவில் என்னை அழகாகக் காட்டியுள்ளார். படத்தின் முக்கால் பகுதி  கதை மலேசியா, தாய்லாந்தில் நடக்கிறது. ஆனால் எல்லாமும் அங்கு எடுக்க முடியாது. கலை இயக்குநர் சுரேஷ் மலேசியா, தாய்லாந்து போலவே  செட்களை இங்கேயே போட்டு  பிரமிக்க வைத்தார்.

நயன்தாரா பிரேமில் இருக்கும்போது ஒரு மேஜிக் நிகழும். இதிலும் எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் நன்றாக வந்திருக்கிறது. நித்யாமேனன் அந்த பாத்திரத்துக்குள் புகுந்து வாழ்ந்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு எல்லாரும் பெரிய ‘ஓ’ போடுங்கள். அவர் இன்னமும் பெரிய ஆளாக வருவார். அவர் ‘ரெமோ’ வில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. நான் ரெமோவாக இருந்தது கடந்த காலம். இனிமேல் சிவாதான் ரெமோ. நான் செய்தது ஊறுகாய் மாதிரி, அவர் பிரியாணியே போடுவார். இங்கே நிவின்பாலி  வந்ததற்கு நன்றி அவரது ‘பிரேமம்’ பார்த்து பைத்தியமாக ஆனேன் நான். அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார்..” என்றார்.

விழாவில் ஹரி இயக்கத்தில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்  விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ புதிய படத்தின்  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் ‘இருமுகன்’  படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், நிவின் பாலி, தம்பி ராமையா, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை  ரித்விகா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், பாடலாசிரியர்கள் தாமரை, மதன் கார்க்கி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு, இயக்குநர் ஹரி  ஆகியோரும்  கலந்து கொண்டு பேசினார்கள். நிறைவாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் நன்றி கூறினார்.

Our Score