‘அரிமா நம்பி’யின் வெற்றிக்கு பின்பு அடுத்து வரவிருக்கும் ‘சிகரம் தொடு’ படம் பற்றியும் கோடம்பாக்கத்தில் நிறைய மவுத் டாக் பரவியிருப்பதால், அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.
‘சிகரம் தொடு’வை அடுத்து ‘வெள்ளைக்கார துரை’ படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதுவொரு காமெடி படமாம்.. இதற்கடுத்த படத்திற்குத்தான் இன்றைக்கு பூஜை போட்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனமும், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
‘சைவம்’ படத்திற்கு பின்பு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கப் போகும் படத்தில்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் விக்ரம் பிரபு. இதில் இவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இந்த கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையும், ‘நெற்றிக்கண்’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகளாவார்.
இன்னோரு ஜோடி காவ்யா ஷெட்டி. ‘வாராயோ வெண்ணிலாவே’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். மேலும் சில தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ராதிகாவும், அம்பிகாவும் நடிக்கவிருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் விஜய்யுடன் 7-வது முறையாக ஜோடி சேர்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களுக்கு புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளார் இயக்குநர் விஜய். இதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் விஜய்.
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநர் விஜய்யின் மனைவியும் நடிகையுமான அமலாபாலும் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!