நடிகர் விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமாக வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது ‘சிறை’ திரைப்படம்.
இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha) நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமாரும் ஒரு நடிகராக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண்.K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த ஒரு அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி. இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவர் நடிக்கும் நான்காவது போலீஸ் கதாப்பாத்திரம்.
இந்த ‘சிறை’ படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த ’சிறை’ எனது 25-வது படமாக வெளியாவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் நடித்திருந்தாலும், அந்தப் போலீஸ் கதாப்பாத்திரத்தில் என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.
இயக்குநர் தமிழ் தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டுதான் இந்தக் கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தப் படத்தில் நடித்தேன், அவர் சொன்னது போலவே படமும் நன்றாகவே வந்திருக்கிறது.
இயக்குநர் சுரேஷ், தமிழைவிட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது அந்த நீண்ட, நெடிய அனுபவம் இந்தக் கதையை மிக நேர்த்தியாக சொல்ல வைத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரின் மகன் அக்ஷய் குமாரும் நன்றாக நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் மிக ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். அவர் அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் தமிழின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், என் கதாபாத்திரத்தை சொன்னபோது, நான் தமிழின் உடல் மொழியைத்தான் பின்பற்றினேன். அவரிடம் இருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன். அதை வைத்து இயக்குநர் சொன்னதை மனதில் வைத்து நடித்திருக்கிறேன். நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.
கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன்? என்ற கேள்வி கேட்கிறார்கள். அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கணும்ன்னு ஆசைப்படுறேன்.
எல்லாவிதமான கதைக் களங்களிலும் நடிக்க வேண்டும். எல்லாமே நடிப்புதானே?.. எல்லாமே கேரக்டர்ஸ்தானே?.. அதனால், நான் இனிமேல் வேற வேற ஜானர்களில் நடிக்கணும்ன்னு நினைச்சிருக்கேன்..” என்றார்.
தான் ஏற்கும் ஒவ்வொரு வேடத்திலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் வித்தியாசத்தைக் காட்டி நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கும் விக்ரம் பிரபுவை, இந்த ‘சிறை’ படத்திலும் புத்தம் புதிய காவல் துறை அதிகாரியாகப் பார்க்கலாம்.









