பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் விஜயபாபுவால் மலையாள நடிகர் சங்கத்தில் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜயபாபு தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னைத் தாக்கி உடல் ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் மலையாள நடிகையொருவர் சென்ற மாதம் கேரள காவல்துறையில் புகார் செய்தார்.
இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரித்த இடைவெளியில் நடிகர் விஜய்பாபு துபாய்க்கு தப்பியோடிவிட்டார். சமீபத்தில் கேரளா திரும்பியவருக்கு கேரள உயர்நீதிமன்றமும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
விஜய்பாபு மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்தப் பாலியல் துன்புறுத்தல் வழக்கு வெடித்தவுடன் தான் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ‘அம்மா’ அமைப்புக்குக் கடிதம் எழுதினார் விஜய்பாபு. இந்தக் கடிதத்தை ‘அம்மா’ அமைப்பின் செயற் குழுவும் ஏற்றுக் கொண்டது.
ஆனால், “விஜய்பாபுவை ‘அம்மா’ அமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்” என்று ‘அம்மா’ அமைப்பில் இருந்த ‘விசாகா கமிட்டி’ உறுப்பினர்களான நடிகைகள் மாலா பார்வதி, குக்கூ பரமேஸ்வரன், ஸ்வேதா மேனன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை ‘அம்மா’ செயற்குழு நிராகரித்ததையடுத்து இந்த மூவரும் அந்தக் கமிட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய்பாபுவும் கலந்து கொண்டார். அவரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற நடிகர், நடிகைகள் பலரும் வரவேற்ற வீடியோக்கள் வெளியாகின.
இந்த நிலைமையில், “விஜய்பாபுவை பொதுக்குழுவுக்கு அனுமதித்தது சரியா..?” என்று ‘அம்மா’ அமைப்பின் செயலாளரான நடிகர் எடவாவா பாபுவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையே இன்னமும் துவங்கவில்லை. இந்த நிலையில் அவர் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடு்க்க முடியாது. மேலும் இதுவொரு கிளப். இதேபோல் விஜய்பாபு திரையுலகத்தின் பல அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளார். அங்கேயெல்லாம் அவர் நீக்கப்படவில்லை. நாங்கள் மட்டும் எதற்காக அவரை நீக்க வேண்டும்..?” என்று பதில் கேள்வியெழுப்பினார் எடவாலா பாபு.
இதேபோல் ‘விசாகா கமிட்டி’யில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்வேதா மேனனிடம் இது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. செயற்குழுவில் மெஜாரிட்டிபடி முடிவெடுத்தார்கள். இதில் என்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை. இப்போது நான் சங்கத்தின் துணைத் தலைவர் என்பதால் சங்கத்தின் மற்றைய நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் விஜய்பாபு விஷயத்தில் என்னுடைய முடிவு ஒன்றுதான்..” என்று பதிலளித்தார்.
இப்படி ‘அம்மா’ அமைப்பிற்குள் இருக்கும் நடிகர், நடிகைகள் விஜய் பாபு விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை சொல்லி வருவதால் மலையாள திரையுலகத்தில் திரும்பவும் குழப்பம் ஏற்பட்டு்ள்ளது.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்குச் சென்ற விஜய்பாபுவை போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் கொச்சியிலேயே பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நடிகை புகாரில் கூறியிருப்பதால் அந்த ஹோட்டல்களுக்கு விஜய்பாபுவை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் விஜய்பாபுவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல் முறையீடு செய்துள்ளது.