இளைய தளபதி விஜய், இன்று இரவு 7 மணிக்கு கோவையில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
மோடி 2 நாட்களுக்கு முன்பாகத்தான் சென்னை வந்து ரஜினியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். அதுவொரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள் இருவரும்.
அதற்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்களான பவன்கல்யான், மற்றும் நாகார்ஜூனா இருவருமே மோடியை அகமதாபாத்திற்கே சென்று சந்தித்தார்கள்.
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே பலவித வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் மாநிலத்திற்கு மாநிலம் செல்வாக்குள்ள நடிகர்களை சந்தித்து பேசுவது.. இதைத்தான் இ்பபோது நடத்தியிருக்கிறார்.
நடிகர் விஜய்யை பொறுத்தவரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து வந்தார். ராகுல் காங்கிரஸில் சேரும்படி அழைப்பு விடுத்தாராம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை விஜய் கேட்டதால் அது முடியாமல் போய்விட்டதாம்.
அடுத்து ஒரு வருடம் கழித்து டெல்லியில் அன்னா ஹாசரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அதில் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
அடுத்து அவரது தந்தை தலைவா படத்தின் ரிலீஸ் சமயத்தில் தனது மகன் புதிய கட்சியைத் துவக்கப் போவதாக தகவல்களை அள்ளிவிட.. இதனாலேயே ‘தலைவா’ படம் படு சிக்கலுக்குள்ளானது. இதையடுத்து அடுத்து வந்த ‘ஜில்லா’ படத்தின்போது அரசியல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
இ்ப்போது நரேந்திர மோடியை கோவைவரைக்கும் சென்று பார்த்ததில் இருந்து விஜய்க்கு இன்னமும் அரசியல் ஆசை இருப்பது போலவே தெரிகிறது..!
இனி ‘அஞ்சான்’ என்னாகுமோ..?