எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்றுக் கொடுக்கும் பாடமும், அது கொடுக்கும் அனுபவமும் மறக்க முடியாதவை. அந்த நேரத்தில் அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் உச்சத்தில் இருப்பது இயல்பானதுதான்.
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும்.
‘தரமணி’ படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து வசந்த் ரவி பேசுகையில், ”தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குநர் ராம் சார் மூலமாக தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைத்திருப்பதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’ திரைப்படம்.
இயக்குநர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக் கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறிய பொழுது சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன். அதன் பிறகு ‘இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும்..?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘எந்தப் பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம்போல சாதாரணமாக படப்பிடிப்புக்கு வந்தால் போதும்…’ என்றார்.
இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். படத்தில் ஒரு கால் சென்டர் ஊழியராக ‘தரமணி’யில் நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதற்கு, அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்ததுதான் காரணமாகும். படம் முழுக்கவே இவ்வாறான காட்சிகளும், வசனங்களும் உள்ளன.
இப்படத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் போல் விளம்பரம் செய்து வரும் தயாரிப்பாளர் J.S.K. சதிஷ்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 11-ம் தேதிக்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்…” என உற்சாகமாக கூறினார் வசந்த் ரவி.