“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..!

“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..!

தமிழ்த் திரைப்பட நடிகர்களிடையே சமீப காலமாக மனக் கசப்புகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. சாதாரணமாக சின்னப் பிரச்சினைகளுக்குக்கூட நேருக்கு நேர் பேசி தீர்க்க முடியாமல் அதனை பொது வெளிக்கு கொண்டு வந்தோ.. அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படத் துறையின் சங்கத்திற்கு கொண்டு வந்து பகிரங்கப்படுத்தி பரபரப்புக்குள்ளாக்குகிறார்கள்.

இந்தப் பரபரப்பினால் தேவையில்லாமல் அவர்களது பெயரும் கெடுவதோடு இல்லாமல், சக நடிகர்களின் மரியாதையும், திரைப்படத் துறை மீதான பொது ஜனங்களின் மதிப்பும் கெடுகிறது. இப்படியொரு சம்பவத்தை மீண்டும் ஒரு முறை செய்திருக்கிறார் வைகை புயல் வடிவேலு.

வடிவேலுவுக்கும் அவருடன் பல திரைப்படங்களில் உடன் நடித்த நடிகரான சிங்கமுத்துவும் பல முட்டல் மோதல்கள் நடந்துள்ளன. இருவருக்குமிடையேயான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இரு தரப்பினருமே இது குறித்து பல முறை பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து தாக்கிப் பேசியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்கு மீண்டும் தூபம் போடுவதை போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நடிகரும், இயக்குநருமான மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலின் சார்பாக நடிகர் சிங்கமுத்துவிடம் சமீபத்தில் பேட்டியெடுத்தார்.

அந்தப் பேட்டியில் “வடிவேலுவுக்கும் உங்களுக்கும் இடையில் என்னதான் பிரச்சினை. ஏன் உங்கள் இருவருக்கும் மோதல் பிறந்தது..?” என்றெல்லாம் கேள்விகளை கேட்டார் மனோபாலா. இதற்கு பதிலளித்த சிங்கமுத்து, “நடிகர் சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் நான் நடித்தேன். அவரைப் பாராட்டுவதுபோல வசனங்களை எல்லாம் பேசினேன். இது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை. ‘சந்தானத்துடன் நடிக்கக் கூடாது’ என்றார். நான் அதனை ஏற்கவில்லை. பின்பு பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தேன். இதுவும் வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை. இதனால்தான் எங்கள் இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது..” என்று பேட்டியளித்திருந்தார்.

இந்தப் பேட்டியை பார்த்த நடிகர் வடிவேலு இப்போது இந்த பேட்டி தொடர்பாக மனோபாலா, சிங்கமுத்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்தின் கதவைத் தட்டியிருக்கிறார்.

vadivelu-manobala-singamuthu-letter

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அலுவலருக்கு வடிவேலு எழுதியுள்ள கடிதத்தில், “நான் நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும் நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த சில உதவிகளை செய்து வருகிறேன்.

நடிகர் திரு.மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்னும் யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றிய சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க அதற்கு அவர் என்னைப் பற்றித் தரக்குறைவாகவும், தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரம் செய்து பதிலளித்துள்ளார்.

மற்றும் அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர்ஷிப் என்கிற வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ஏற்கெனவே எனக்கும் திரு.சிங்கமுத்துவிற்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகையினால் திரு.மனோபாலா மீதும், திரு.சிங்கமுத்து மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண ஒரு சின்ன விஷயம். சக நடிகர்கள் தங்களுடைய முரண்பாடுகள் பற்றிப் பேசியதற்கெல்லாம் சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கும்படி மிகப் பெரிய நடிகரே கோரிக்கை வைக்கும் சூழலை பார்க்கும்போது தமிழ்த் திரையுலகத்தில் ஒற்றுமை என்பது கண்ணுக்கெட்டிய தொலைவுவரையிலும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!

Our Score