‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதி அன்று வெளியாகின்றது.
விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடிகர் தியாகராஜன் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில வருட இடைவெளிக்கு பின்பு படம் நெடுகிலும் வரும்படியான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதால் இந்தப் படம் இந்த வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எமன் படத்தில் தன்னுடைய பங்களிப்பு பற்றி நடிகர் தியாகராஜன் பேசும்போது, “சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன்.
ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம்தான் இந்த ‘எமன்’ திரைப்படம்.
எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக் களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில், நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.
ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் அடையாளப்படுத்துவது போல என்னுடைய கேரக்டர் இல்லை. நானும் என்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் எந்த அரசியல்வாதியையும் குறிப்பிடும்படியாக நடிக்கவில்லை. ஆனால் இதுவரையிலும் தமிழில் வந்திருக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களிலேயே இந்தப் படம் மிக, மிக வித்தியாசமானதாக இருக்கும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இயக்குநர் ஜீவா சங்கரின் இயக்கத் திறமையை பார்த்து அசந்து போனேன். அவருடைய இயக்கத்தில் இந்தப் படம் சிறப்பாக உருவெடுத்திருக்கிறது.
நல்ல வலுவான கதையம்சத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்” என்று தனக்குரிய கம்பீரக் குரலில் சொல்கிறார் நடிகர் தியாகராஜன்.