நீட் நுழைவுத் தேர்வுக்கான விளக்கப் புத்தகம் வெளியிடும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கல்வியியலாளர் பேராசிரியர் கல்யாணி, நடிகர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது மாணவர்கள் சினிமா விமர்சனங்கள் பற்றி பேசுகின்ற நேரத்தில் கல்வி முறையைப் பற்றியும், அவரவர் கல்வியைப் பற்றியும் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நடிகர் சூர்யா பேசுகையில், “இங்கே எனக்கு முன்பாக பேசிய ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாக பேசியதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். எங்கள் அகரம் மூலம் நிச்சயமாக அதற்கான வேலைகளை தொடங்கவிருக்கிறோம் என்பதை முதலில் கூறிகொள்கிறேன்.
அதற்கான மொழிபெயர்பாளர்கள் அறிஞர்கள் தயாராக இருந்தார்கள் என்றால் வேலை இன்னும் வேகமாக நடக்கும். அதற்கான வேலைகளிலும் அகரம் ஈடுபட உள்ளது என்பதை அகரம் சார்பாக மற்றும் அனைவரது சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையை மிக முக்கியமான மேடையாக நான் பார்க்கிறேன். இன்றைய கல்விச் சூழல் எப்படி உள்ளது என்று விரிவாகவும். தெளிவாகவும் அனைவரும் பேசியதற்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த ஊடகங்கள் முலமாக இன்னும் அதிகமா தெரியவரும்.
அதற்கு முன்பாக அகரம் எப்படி ஆரம்பித்தது என்பதை நான் கூற விரும்புகிறேன். இதேபோல்தான் 36 வருடங்களுக்கு முன்பு ‘சிவகுமார் அறக்கட்டளை’ என்ற பெயரில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யும்விதமாக வீட்டிற்கு அழைத்து காசோலை செலுத்தி மரியாதை செய்துவந்தோம்.
இந்தச் செயல் சரியானதா என்ற கேள்வி தோன்றியது. அனைவரையும் சமமாக பார்க்கிறோமா என்று கேள்வி ஞானவேலிடம் இருந்து வந்தது. பின்பு பார்க்கும்போது மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களில் 75% மேல் I.A.S. அதிகாரியோட மகனாகவோ, மகளாகவோ இருக்கலாம். ஒரு பொறியாளரின் அல்லது மருத்துவரின் மகனாகவோ மகளாகவோ இருக்கலாம்.
நகரத்தில் படித்து வந்த மாணவர்களையும் கிராமத்தில் படித்து வந்த மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் இதற்கும் மேல் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பண்ண போகிறோம் என்றும் தோன்றியது.
அதற்கு இந்த கல்வி சூழல் எப்படியுள்ளது என்று 10 வருடங்களுக்கு முன்பாகத்தான் இன்னும் அழமாக யோசிக்க தொடங்கினோம். அகரம் மூலமாக அரசு பள்ளி மற்றும் அதை சார்ந்த உதவிகள் பெற்றுள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு பக்கபலமாக அகரம் அமைய அந்த ஒரு உரையாடல் முக்கியக் காரணமாக அமைந்தது. அதில் இருந்து ஒரு அழகான பயணம் இன்று 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இந்த ஒரு உரையாடலும் மற்றும் இதை போன்ற ஒரு விழிப்புணர்வும் அவசியம் அடிக்கடி தேவை என்று நான் நினைக்கின்றேன். 2007-ம் ஆண்டு ‘அயன்’ படத்தின் படப்பிடிப்புக்காக டான்ஷிபார் என்ற இடத்திற்கு சென்றேன். அது ஒரு தீவு. அங்குள்ளவர்கள் எனக்கு அவர்களுடைய பாரம்பரிய நடனத்தை கற்றுக் கொடுத்தார்கள். அங்குள்ள மக்களுக்கு மற்ற மொழி தெரியவில்லை. ஆனாலும் 70 வயதுடைய ஒரு மனிதர் மிக அற்புதமாக ஆங்கிலத்தில் பேசினார். அவருடைய உடை, நடவடிக்கை, செயல் எல்லாம் வித்தியாசமாக இருந்தது.
பின்பு விசாரித்தபோதுதான், முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் போர் ஒன்று நடைபெற்றது என்பதை அறிந்தேன். அந்தப் போரினால், அந்த ஊரில் இருந்த அனைத்து கல்விக் கூடங்களும் அழிக்கப்பட்டனவாம். அதனால் அங்கு நல்ல கல்விக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என்று எதுவுமே இப்போதும் கிடையாது.
அந்த டான்ஷிபாரில் உள்ளவர்கள் சாராய கடைகள் வைத்துள்ளனர். இல்லையென்றால் சாதாரண கூலி வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் 60, 70 வயதான அனைவருக்கும் நல்ல அறிவும், திறமையும் இருந்தது.
ஒரு நல்ல கல்விக் கூடம் இல்லை என்றால் ஒரு அணு ஆயுதம் என்ன விளைவை எற்படுத்துமோ அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறையுள்ள பள்ளிகளும் குறையுள்ள கல்லூரிகளும் இருந்தது என்றால் அங்கு அதன் பாதிப்பு பல மடங்காக இருக்கும்.
ரவிக்குமார் கூறியது போன்று கடந்த 10 வருடங்களாக கல்வி முறையில் நிறைய கேள்விகள் இருக்கிறது. அதை அலசி ஆராயும் விஷயமாக தான் கல்யாணி ஐயாவோட இந்தப் புத்தகத்தை நான் பார்க்கிறேன். இதை அகரம் மூலமாக வெளியிட நங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படுகின்ற கஷடங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கும் நகர்ப்புற வாழ்க்கையை வாழ, படும் கஷடங்கள் மிகவும் கடினமான ஒன்று.
ராமசாமி என்கிற மாணவன் கிட்டதட்ட 3 கிலோ மீட்டர் நடந்துவந்து பள்ளியில் படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார். அவருக்கு P.S.G. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கிடைக்கின்றது. அனைத்து பொருளாதார உதவிகளும் கிடைக்கிறது. ஆனாலும் அழுத்தம் காரணமாக படிக்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார்.
வருடா வருடம் கிட்டதட்ட 200, 300 மாணவர்களில் 2 மாணவர்களாவது எவ்வளவு உதவி, பாதுகாப்பு அளித்தாலும் அழுத்தம் காரணமாக திரும்பி சென்று விடுகிறார்கள். இதை கண்காணிக்க வேண்டியவர்கள் இதைப் பற்றி பேசுவதில்லை. இதற்கான எந்த உரையாடலும் எங்கேயும் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்ல போனால் ஒரு I.A.S. அதிகாரி, அகரத்தை தொடர்பு கொண்டு விடுதியில் நிறைய தற்கொலைகள் நடக்கின்றன. வெறும் மதிப்பெண்கள் குறைந்தால் அந்த அழுத்தம், தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றார்.
2 வருடங்களுக்கு முன்பு நிறைய நடந்தது. அதை பற்றிய உரையாடல் நடந்தது. அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. எந்த அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. ஐயா சொன்னது போல் கால்களை கட்டி போடவில்லை. கட்டிப் போட்டு ஓட்டப் பந்தயம் வைத்து முதலில் வந்தவருக்கு பரிசு கொடுக்கவில்லை. கிட்டதட்ட கால்களை வெட்டி போட்டு முதலில் வந்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகின்றோம். இது சரியா, இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து நிறைய தொகுப்புகளை கல்யாணி ஐயா இந்த புத்தகத்தில் வைத்துள்ளார்.
ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம். அதை இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று படத்தின் இடைவேளை காட்சியை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம் என்று உரையாடுகின்றோம்.
கிட்டதட்ட 25 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வியில் சேருகிறார்கள். பின்பு பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றவர்கள் 1 ½ லட்சம் மாணவர்கள்கூட கிடையாது. நிறைய மாணவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள். இப்போ கல்யாணி ஐயா சொன்னது போல் 2800 இடங்கள் அரசு பள்ளியில் உள்ளது. அதில் படிப்பவர்கள் 6௦ % மாணவர்கள்தான். இதுதான் நமது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை.
ஆனால் அவர்கள் மருத்துவ துறையில் நுழைய நிறைய கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது. 2, 3 இடங்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கின்றது.
மாணவர்கள் நீங்கள் ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள். டொனால்டு ட்ரம்பை அமெரிக்க மக்கள் எப்படி அதிபராக தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் பற்றி அலசி ஆராய்ந்து பார்க்கும் நீங்கள், நமது கல்வி முறையை பற்றி பேசுவதில்லை. இந்த மாதிரி விஷயங்கள் அடிக்கடி நிகழாது.
இப்பொழுது இந்த உலகம் இணையதள உலகமாக உள்ளது. ஒரு நிகழ்வு அனைவரிடமும் விரைவாக போய் சென்று விடுகிறது. ஆனாலும் கிராமப் புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஒரு பெரிய வீரியம் இருந்தால் மட்டுமே நகரத்தில் பயணிக்க முடியும். மேலும் தமிழ்நாட்டையும் தாண்டி வேறு மாநிலத்துக்கும் போக முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
அத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு பண்ணுவது கல்வி மட்டுமே. எங்கேயாவது ‘டிசைன் இன் இந்தியா’ என்ற வாசகத்தை பார்க்கின்றோமா..? எப்போதாவது ‘மேட் இன் இந்தியா’ என்ற வாசகத்தைத்தானே பார்க்கிறோம்.
தயவு செய்து இந்த புத்தகத்தில் நேரத்தை செலவிடுங்கள். அதை போல் இப்புத்தகத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தொகையும் கல்யாணி ஐயாவோட பள்ளிக்கு போய் சேரும். அகரம் இதேபோல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்…” என்றார் சூர்யா.