full screen background image

“ரசிகர்கள் ‘கடுகு’ படத்தை கை தட்டி ரசிப்பார்கள்…” – நடிகர் சூர்யாவின் பாராட்டு..!

“ரசிகர்கள் ‘கடுகு’ படத்தை கை தட்டி ரசிப்பார்கள்…” – நடிகர் சூர்யாவின் பாராட்டு..!

ரஃப் நோட் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பரத் சீனி தயாரித்துள்ள புதிய படம் ‘கடுகு’. இந்தப் படத்தில் பரத், சுபிக்சா இருவருடன் நடிகரும், இயக்குநருமான ராஜகுமாரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர், இயக்குநரான விஜய் மில்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘கடுகு’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், சக்திவேல், ஞானவேல்ராஜா மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, “இந்த ‘கடுகு’ ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

IMG_4664

இப்பத்தான் வீடு கட்டியிருக்கோம். எல்லோரும் ஒண்ணா இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் அப்பா, அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.  2-டி எண்டர்டெயின்மெண்ட் ஆரம்பித்தது என அனைத்துமே புதியை அனுபவத்தைதான்  கொடுத்திருக்கு.

இது அனைத்தும் சினிமா கொடுத்தது. இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு. சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலத்தான் 2-டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ  நான் பார்க்குறன்.

நான் நடிக்காத படங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கணும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோன்றியது. அதனால்தான் 2-டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். ‘பசங்க 2’, ‘36 வயதினிலே’ என்று படம் தயாரித்தோம். எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல மனசார நினைக்கிற விஷயங்கள் அனைத்தும் நடக்கும். எத்தனை தடங்கல்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்திக் காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில்தான் வரும். எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.

IMG_4459

ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால், பிறகு மறுபடியும் அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா..? ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகணும் என்று எனக்கு  ஆசை வந்தது. அதனால் அது போன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவர்களோடு இணைந்தேன்.

விஜய் மில்டன் நடிகர், கேமிராமேன் என்று தாண்டியும் எனக்கு நல்ல நண்பர். எனக்கும் என்னோட நட்பு வட்டாரத்த புதுப்பிச்சக்கணும் என்ற எண்ணம் இருந்தது.  ஏற்கெனவே  நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.  இப்போது இன்னமும் நெருங்க இந்த ‘கடுகு’ திரைப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.

படம் பார்த்தோம்.. நல்ல படம். நாங்களே வாங்கி ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம். இது ஒரு புது முயற்சி. இதற்கு ஒரு பாலமாக மட்டும்தான் நான் இருக்கிறேன். 

படத்தில் அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு. ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில்தான் தெரிவார்கள். கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் ‘நந்தா’ போன்ற படங்களில் நடித்தேன். சில படங்கள் மனசார பண்ணனும் என்று தோன்றும். அந்த வரிசையில் ‘கடுகு’ ஒரு படமாக தெரிந்தது.

எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்  படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள்  போய்விடுவோம்.  யுனிக்  படத்தை  யார்  எடுத்தாலும்  ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க. சின்னது, பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள். 

IMG_4391

நாங்க மட்டும் சொல்வது இல்லாமல், மீடியாவாகிய நீங்கள் சொல்வதையும் நம்பி வரவேற்பார்கள். அந்த வகையில் ‘கடுகு’ படத்தையும் நிச்சயம் கைதட்டி வரவேற்பார்கள். பாடல்கள்,  பைட்,  காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும். பரத் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டார் என்று எனக்கு சர்பிரைசாக இருந்தது. அந்த அளவுக்கு இதில் உழைச்சிருக்கார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவர்களது சமூக சேவைகளுக்கு எனது பாராட்டுக்கள்.

நான் ஒருவரை சந்தித்தேன். அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார். அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க் போட்டேன். 

அதைப் பார்த்த அவர், ‘மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்காங்க.. நீங்க ஏன் குறைவாக போடுறீங்க?’ என்று கேட்டார். ‘உங்களை உங்களுக்கு பிடித்தால்தான் மற்றவர்களுக்கு பிடிக்கும்’ என்பார்கள். அதுதான் இந்த படம். இது மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் இருக்கு. ‘கடுகு’ நல்ல படம்.. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.” என்றார்.

நடிகர் சூர்யா ‘கடுகு’ படத்தின் பாடல்கள் அடங்கிய  குருந்தகடை வெளியிட,  பெருந்துறையைச் சேர்ந்த கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி,  ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை,  போக்குவரத்து  காவலர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார்.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில் நுட்பங்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளவர் ஆவார்.

சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.

கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு செல்லலாம். கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு வகைகள் பறிமாறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது இந்த தனி பண்புகளை பாராட்டும் வகையில், ‘கடுகு’ படத்தின் பாடல்கள் இவர்கள் மூலமாக வெளியிடப்பட்டது.

Our Score