full screen background image

“என்னைவிடவும் ஜோதிகா நன்றாக நடிக்கிறார்..” – சூர்யாவின் பாராட்டு..!

“என்னைவிடவும் ஜோதிகா நன்றாக நடிக்கிறார்..” – சூர்யாவின் பாராட்டு..!

சமீபத்தில் வெளியாகி இப்போதும் தமிழ்நாடெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘36 வயதினிலே’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பெண்ணியப் படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. தமிழகம் முழுவதிலும் இந்தப் படத்திற்கு நல்ல சப்போர்ட்டும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் கிடைத்த்தில் தயாரிப்பாளரான சூர்யாவும், ஹீரோயினான ஜோதிகாவும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

தங்களின் இந்த உணர்வை வெளிக்காட்ட நேற்றைய தினம் மாலையில் தி.நகர், ரெசிடென்ஸி ஹோட்டலில் ‘36 வயதினிலே’ திரைப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா, “இந்தப் படம் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பயணம். திடீர்னு படத்தோட கதையை இயக்குநர் சொன்னார். வேகவேகமா பட வேலைகளும் முடிந்து வெளியாகி இப்போது மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்தப் படம் வெற்றிப் படம் என்பதையும் தாண்டி நிறைய பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் தங்களுடையை மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் மேலான பார்வை இந்தப் படத்தைப் பார்த்த பின்பு மாறியிருக்கிறது. இதுவே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் நினைக்கிறோம்.

ஜோ நடித்து வெளிவரவிருக்கும் படம் என்பதால் எல்லோரையும் போலவே எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது. என்னுடைய மனைவி என்பதையும் தாண்டி ஜோவின் நடிப்பு இந்தப் படத்தில் என்னை ஈர்த்துவிட்டது.

இந்த படத்திற்காக ஜோ, ப்ளஸ் 2 படிக்கும் மாணவியைப் போன்று டயலாக்குகளை இரவு நேரத்தில் விழுந்து, விழுந்து படிப்பார். சில சமயங்களில் நானும் டயலாக்குகளை சொல்லிக் கொடுத்தேன். இந்த படத்தில் வரும் எந்த டயலாக்கையும் இப்போது கேட்டாலும் ஜோ அப்படியே மனப்பாடமாக சொல்வார்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் அப்பா, ‘தவறாக எடுத்து கொள்ளாதே… உன்னைவிட ஜோதிகா மிகவும் அருமையாக நடிக்கிறார்’ என்று பாராட்டினார். இதுவே ஜோவுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு..  ஹேட்ஸ் ஆப் ஜோ…” என்றார் உற்சாகத்துடன்..!

Our Score