திரையுலக மார்க்கண்டேயனான நடிகர் சிவக்குமார் இப்போது படங்களில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டு ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் மாணவர்களுக்கான சுய முன்னேற்ற பேச்சுக்களை கல்லூரிகளில் போய் பேசி வருகிறார். அபூர்வமாகத்தான் சினிமா சம்பந்தமான விழாக்களில் அவரைப் பார்க்க முடிகிறது.
நேற்றைய முன்தினம் நடந்த நாகிரெட்டி நினைவு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் தன்னுடைய பேச்சில் கூட்டத்தினரை கட்டிப் போட்டுவிட்டார். மடைதிறந்த வெள்ளமாய் அவர் பேசிய விதமும், பாடல்களை மனப்பாடமாய் சொல்லிய விதமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
விஜயா வாஹினி ஸ்டூடியோவைப் பற்றிய தனது நினைவலைகளைப் பேசும்போது காரைக்கால் அம்மையார் படம் பற்றியும் பேசினார் சிவக்குமார்.
“1973-ம் வருஷம் இந்தப் படம் தயாராச்சு.. இதுல நான் சிவபெருமானா நடிச்சேன். காரைக்கால் அம்மையாரா கே.பி.சுந்தராம்பாள் அம்மா நடிச்சாங்க. அவங்க அந்தக் காலத்துலேயே ஒரு லட்சம் ரூபா சம்பளம் வாங்கினவங்க. அவங்களை மிஞ்ச இனிமேலும் ஒரு நடிகை இங்க கிடையாது.. அவ்வளவு சுத்தம்.. அவங்க பாட்டென்ன.. பேச்சென்ன..? பாட்டுக்கு அவங்க காட்டுற எக்ஸ்பிரஷன் என்ன..? எல்லாத்துக்கும் பொருத்தமானவங்க அவங்கதான்..
அந்தப் படத்துல ‘தகதகவென ஆட வா’ன்னு ஒரு பாட்டு. குன்னக்குடி வைத்தியநாதன் மியூஸிக். கவியரசர் கண்ணதாசன் பாட்டெழுதிட்டாரு.. குன்னக்குடி போட்ட மெட்டுக்கு கவியரசர் எழுதின பாட்டு அது.. அந்தப் பாட்டை இப்போ கேட்டாலும் அந்த வயசுல கே.பி.சுந்தராம்பாள் அம்மா எப்படி அந்தப் பாட்டை பாடினாங்கன்னு ஆச்சரியம்தான் வரும். (அந்தப் பாடல் முழுவதையும் மனப்பாடமாக பாடிக் காட்டினார் சிவக்குமார்)
அப்போ அதுல நான் நடிக்கப் போனேன். எனக்கு ஜோடியா பார்வதியா வித்யா நடிச்சாங்க. எனக்கு டான்ஸ் தெரியுமான்னு கேட்டார் டைரக்டர் ஏ.பி.நாகராஜன். கத்துக்குவேன்னு சொன்னேன்.. இனிமே நீ எப்போ கத்துக்கிட்டு வந்து எப்போ டான்ஸ் ஆடி.. நான் எப்போ இந்த ஷூட்டிங்கை முடிக்கிறதுன்னு அதிர்ச்சியாயிட்டார்.
‘நீ என்ன செய்வியோ.. ஏது செய்வியோ தெரியாது.. 20 நாள் டைம் தரேன். அதுக்குள்ள இந்தப் பாட்டுக்கு ஆடுற மாதிரி நடனம் கத்துக்கிட்டு வா’ன்னு ஏ.பி.நாகராஜன் சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை விடக் கூடாதேன்னு நினைச்சு டான்ஸ் மாஸ்டரை வீட்டுக்கு கூப்பிட்டு வைச்சு 20 நாள் ஆடி ஆடி டான்ஸ் கத்துக்கிட்டேன்.. அந்தப் பாட்டையும் வாஹினில 10-வது புளோர்லதான் படமாக்கினாங்க.. இப்பவும் அந்தப் பாடல் காட்சியை பாருங்க. நான் அப்பத்தான் டான்ஸ் ஆடுற கத்துக்குட்டின்னு தெரியவே தெரியாது. அந்த அளவுக்கு ஆடியிருப்பேன்..” என்றார்.
விடாமுயற்சியும், கடும் உழைப்பும் இல்லையேல் சினிமாவுலகில் நிற்கவே முடியாது என்பதற்கு இந்த ஒரு செயலும் உதாரணம்..!
அந்தப் பாடல் காட்சியை இந்தக் காணொளியில் காணலாம்..