full screen background image

“எனக்கு மட்டும் ஏன் பிரச்சினையை கொடுக்குறீங்க..?” – மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிவகார்த்திகேயன்..!

“எனக்கு மட்டும் ஏன் பிரச்சினையை கொடுக்குறீங்க..?” – மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிவகார்த்திகேயன்..!

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரித்த ரெமோ படத்தின் வெற்றி விழா இன்று மாலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் படத்தில் பங்கெடுத்திருந்த கலைஞர்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள். ஹீரோ சிவகார்த்திகேயன், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், யோகி பாபு, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சியாளர் அனல் அரசு, மற்றும் ரெமோ படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

remo-success-meet-3

விநியோகஸ்தர்களை மேடையேற்றி அமர வைத்திருந்தனர். விநியோகஸ்தர்கள் சார்பில் திருப்பூர் சுப்ரமணியம் பேசினார்.

விழாவில் ரெமோ படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்ணீர் விட்டு அழுதார்.

“எங்களை வேலை செய்ய விடுங்க. ஏன் எங்களுக்கு மட்டும் பிரச்சனையை கொடுக்குறீங்க…?” என்றும் ஆவேசமாக கேட்டார்.

remo-success-meet-5

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசும்போது, “ஒரு படத்தை கடைசியா பார்க்கும்போது ‘இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்’; ‘அப்படியிருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்’ன்ற யோசனை அனைவருக்குமே இருக்கும். அனிருத், ரசூல் ஸார்ன்னு படத்துல பங்கெடுத்துக்கிட்டவங்ககிட்டேயே இது இருக்கும். ஆனால் படத்தின் துவக்கம் முதல் கடைசிவரையிலும் நம்பிக்கையா இருந்தது இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஸார்தான். அவருக்கு ஒரு பெரிய வணக்கம்.

‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸ் அன்று காலைல 7 மணிக்கு ராஜா ஸாருக்கு போன் செஞ்சேன். அவரோ ‘ரிலீஸ் இன்னும் கன்பார்ம் ஆகலை’ சிவான்னார். ஒரு படத்துல நடிச்சிட்டு அந்தப் படம் ரிலீஸாகுமா, ஆகாதான்னு தெரியாமல் உக்காந்திருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா..? அதை அன்னிக்கு அனுபவிச்சேன்.

ஆனால் அந்தக் கொடுமையெல்லாம் இந்தப் படத்துல இல்லவே இல்லை. அது எதுவுமே எனக்கு இல்லாமல் எல்லாத்தையும் தன் தோள்ல தூக்கிக்கிட்டு படத்தை தாங்கிக்கிட்டாரு ராஜா ஸார். நான் கூலா 18 மணி நேரம்கூட ஷூட்டிங்ல நடிச்சிருக்கேன். அப்படியே வீட்டுக்குப் போய் பாப்பாகிட்ட விளையாடிட்டிருப்பேன். ஆனால் அந்த மனுஷனை ஒரு நாள்கூட அவரோட பேமிலியோட நான் பார்த்த்தே இல்லை. கொஞ்சம் எமோஷனலா இருக்கு.. (என்று சொல்லிவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்).

sivakarthikeyan-1

நானும் நிறைய புரொடெக்சன் கம்பெனில பார்த்திருக்கேன். ஆனால் இந்த மனுஷன் ‘இந்த போஸ்டரை கொடு..’ ‘அந்த போஸ்டரை கொடு’ன்னு விளம்பரக் கம்பெனிக்காரங்ககிட்ட பேசிக்கிட்டேயிருப்பார். எத்தனை நாள் ஆபீஸ் வாசல்லேயே நின்றிருந்தாருன்னு கேட்டுப் பாருங்க. அவர்கிட்ட மொதல்ல சொந்தமா கார் இருக்கா.. வீடு இருக்கான்னு கேளுங்க..

இந்தப் படம் எடுத்து முடியறதுக்குள்ள எத்தனை பிரச்சினையைத்தான் கொடுப்பீங்க..? யாரெல்லாம் பிரச்சினை கொடுக்குறாங்கன்னு உங்களுக்கே தெரியும். நான் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன். நானோ அவரோ சம்பாதிக்கணும்னு நினைச்செல்லாம் படம் எடுக்க வரலை. ஆடியன்ஸ் நல்லா ரசிக்கணும். அதுக்காகத்தான் படம் எடுக்க வர்றோம். அதுக்காக எங்களை வேலை செய்ய விடுங்க. கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. வேலை செய்ய விடுங்க.. அவரையும் சரி.. என்னையும் சரி..

இன்னிக்குவரைக்கும் அவர் ஒரு நாள்கூட முழுசா தூங்கலைங்க.. அவர் நினைச்சிருந்தால் இந்தப் படத்தில் வந்த லாபத் தொகையை எடுத்திட்டு எங்கயாவது போய் செட்டிலாயிருக்கலாம். ஏன்.. எதுக்கு.. எனக்குப் புரியலை..

என்ன ஆசைப்படுறோம்..? வேற ஒண்ணுமில்லீங்க. வேற யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு.. அதை இங்க வந்திருக்கிற நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்குக் கொடுத்திருக்கீங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து எழுதிக் கொடுத்ததுதான் இந்த மேடை.  

தியேட்டர்ல எல்லாரையும் சிரிக்க வைக்குற மாதிரி ஒரு நல்ல படம் செய்வோம்ன்னு நான் நினைச்சேன். அதே ஆசைதான் அவருக்கும். ஒரு நல்ல டீம் கிடைச்சிருக்கு. பெரிய படம் பண்ணுவோம். என்னிக்காச்சும் ஒரு நாள் புதுசா ஒரு படம் பண்ணிர மாட்டோமான்றதுதான்.

remo-success-meet-1

நான் ஒண்ணுமே கேக்கலை. உதவி எதுவும் செய்ய வேணாம். உதவி செய்யவோ, ஆதரவு கொடுக்கவோ பிரஸ் இருக்காங்க. மக்கள் இருக்காங்க. படம் நல்லாயிருந்தால்  இன்னும் நல்லதை கொடுக்குறோம். நல்லாயில்லைன்னு சொன்னாங்கன்னா அதைத் திருத்திக்கிட்டு நல்ல படமா கொடுக்கப் பார்க்குறோம். ஆனால் வேலை செய்றதை தடுக்காதீங்க. இதை மட்டும் எல்லார்கிட்டேயும் என்னுடைய வேண்டுகோளா வைச்சுக்குறேன்.

நானும் உங்க இடத்துலதான் இருந்துதான் இந்த மேடைக்கு வந்திருக்கேன். இந்த இடத்தை தக்க வைச்சுக்கணும். இதை வைச்சு மேல பெரிசா செய்யணும்னுல்லாம் எனக்கில்லை. கிடைத்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கணும். நிறைய பணம் கிடைக்குது எனக்கு. அந்தக் காசுக்கு நல்லா வேலை செய்யணும்னு நான் நினைக்கிறேன். அந்த வேலையை செய்ய விடுங்கன்னு நான் கேட்டுக்குறேன்.

ஒரு பெரிய பிராஜெக்ட்டை செய்யும்போது அதை எல்லாருடைய வீட்லேயும் கொண்டு போய் சேர்க்க எங்களால தனியா முடியாது. பத்திரிகையாளர்களால் மட்டுமே அது முடியும். நீங்கதான் அதை செஞ்சிருக்கீங்க. அதுக்காக உங்களுக்கு பெரிய, பெரிய நன்றி.

நான் முன்னாடி சொன்னதுதான். எனக்கு பின்னாடி யாருமே இல்லை. முன்னாடி இருக்குற நீங்க மட்டும்தான் எனக்கு இருக்கீங்க. இதே மாதிரி நீங்க எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கணும்.

கண்டிப்பாக ஒரு நாள் நீங்களெல்லாம் சேர்ந்து பெருமைப்படுற மாதிரியான ஒரு படத்தை எங்க டீம் நிச்சயமா கொடுக்கும். ஒரு கம்பெனில முதல் படம் ரொம்ப முக்கியம். இந்தப் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வந்திருக்கும் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். என்னடா இவன் ஏறும் மேடையிலெல்லாம் அழுகிறானே என்று..!? தப்பான விஷயத்தைப் பண்ணிட்டு அழுதாதான் தப்புன்னு நான் நினைக்கிறேன். நான் ரொம்ப உண்மையா இருக்கேன். யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும் இதைத்தான் நினைக்கிறார். அதுனால நான் அழுகுறதை தவறா நினைக்கலை. இந்தக் கண்ணீரைத் தாண்டி ராஜா அண்ணனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுக்குறதுன்னும் தெரியலை. அடுத்து ராஜாண்ணன் என்ன செய்யலாம்னு நினைக்கிறாரோ, அதை பெரிசா செய்யலாம்.

எல்லாரும் நினைக்கலாம்.. ரொம்ப ஹிட்டு வந்துக்கிட்டேயிருக்குன்னு. அதுதான் எனக்கு ரொம்ப பயத்தைக் கொடுக்குது. ஏன்னா இது எங்கிட்டிருந்தோ திருடிட்டு வர்ற மாதிரியிருக்கு. அப்படியில்லை. இது போராடி.. போராடித்தான் கிடைச்சது. ஒவ்வொரு ஹிட்டுக்கும் பதட்டமாவே இருக்க வேண்டியிருக்கு. ஆறு மாசம் வீட்ல சும்மா உக்காந்திருந்தேன். அந்த நேரத்துல ஜாலியா இரண்டு படம் செஞ்சிருக்கலாம். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. சந்தோஷமா செய்ய முடியாது.

ஒரே நாள்ல 20 மணி நேரம்கூட ஷூட்டிங்ல நடிச்சிருக்கேன். அப்போவெல்லாம் நான் டயர்டா இருந்திருக்கேனே தவிர, சோகமா இருந்ததே இல்லை. நான் இப்படியேதான் எல்லா படங்களையும் பண்ணனும்னு நினைக்கிறேன். ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர், பிளாப்புன்னு எல்லாத்தையும் நீங்க சொல்லுங்க. திருத்திக்கிட்டு படம் செய்ய நாங்கள் தயார்.. இங்க வந்திருந்த அனைவருக்கும் பெரிய, பெரிய நன்றி. வணக்கம்.” என்று சொல்லி முடித்தார் சிவகார்த்திகேயன்.

Our Score