‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளரும், நடிகருமான சித்தார்த் பேசும்போது, “ஒரு குறும்பட இயக்குநர், சினிமா இயக்குநரா வந்த முதல் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி.’ அதன் ஹீரோ நான்தான். அது இன்று வரையிலும் தொடர்கிறது. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் தீரஜ் வைத்தியும் குறும் படங்களை இயக்கியவர்தான்.
இந்தப் படத்தில் சில ஆண்கள், பெண் வேடத்தில் வருவது போல காட்சிகள் உண்டு. ஆனால் கதாநாயகி இல்லை. அது ஒரு குறையாகவே இல்லாத அளவுக்கு படம் நல்லா வந்திருக்கு.
இந்தப் படத்துல பெரிய மெசேஜ், தத்துவமெல்லாம் எதுவும் இல்ல. குடும்பத்தோட வந்து உட்காந்தா நல்லா வாய் விட்டு சிரிச்சுட்டு, மனம் விட்டு ரசிச்சிட்டு போலாம்.
இந்த டைட்டிலுக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பது எனக்கும் தெரியும். வரிவிலக்கைவிட என் படத்துக்கு உயிர்தான் முக்கியம். அது இந்த டைட்டில்தான்.
எனது எட்டாக்கி நிறுவனம் மூலம் தொடந்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறேன். .அதுல இரண்டு படங்களை விரைவில் ஆரம்பிக்கிறேன்.
என் படங்களில் ஸ்கிரிப்ட்தான் ஹீரோவாக இருக்கும். அதனால் நான் நடிப்பேன். இல்லன்னா ஆரம்ப நிலையில் உள்ள ஹீரோக்கள் அல்லது புதுமுக ஹீரோக்கள் நடிப்பார்கள். ஏன்னா.. பெரிய ஹீரோக்களுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது..? ஆனால் புதிய, புதிய டெக்னீசியன்களை, படைப்பாளிகளை அறிமுகப்படுத்த ஆசை இருக்கு. இந்த ‘ஜில் ஜங் ஜக்’ படமே அதனால்தான் உருவானது.
இது தவிர ‘WRITERS LAB’ என்ற பெயரில், நிறைய கதை, திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கப் போகிறேன். 18 முதல் 35 வயதுவரை உள்ள பலரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவுள்ளேன். அவர்களின் பணியே நிறைய கதை-திரைக்கதைகளை உருவாக்குவதுதான். அவங்க டைரக்டராகவெல்லாம் ஆக மாட்டாங்க. எழுத்து மட்டும்தான். ஏனெனில் நல்ல கதைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கும்னு நான் நம்புறேன்.
இது எல்லாத்துக்குமான ஆரம்பத்தை இந்த ‘ஜில் ஜங் ஜக்’ படம் கொடுத்ததுதான் சந்தோஷமான விஷயம். இந்தப் படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். ரசிப்பார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்..” என்றார்.