சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 17-ம் தேதி அன்று வெளியாகின்றது.
இந்தப் படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மணி சேயோன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பிரபல விநியோகஸ்தரான சரவணன் இந்தப் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் ஒரு அரிய வகை மீன்தான் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி பேசிய படத்தின் நாயகன் சிபிராஜ், “நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் என்னுடன் நடித்தது ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு அந்தப் படத்தில் நடிக்கும்போது எதுவும் கஷ்டமாக இல்லை.
ஆனால் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் ஒரு மீனுடன் நடித்தது எனக்கு மட்டுமல்ல.. எங்கள் யூனிட்டுக்கே ஒரு சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம், ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். மறுபடியும் எடுக்க வேண்டி வரும். இப்படி நாங்கள் பல ‘ரீ டேக்’ எடுக்க வேண்டியதாகிவிட்டது.
நான் நடித்த முந்தைய படங்களைவிட ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் எனக்கு காதல் காட்சிகள் அதிகமாகவே இருக்கின்றது. ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தாலும், ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷின் சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்தது.
சித்ரா லட்சுமணன் சார், லிவிங்ஸ்டன் சார் போன்ற மூத்த கலைஞர்கள், காளி வெங்கட், யோகி பாபு போன்ற புதிய கலைஞர்கள் மற்றும் பேபி மோனிக்கா என எல்லா தலைமுறை கலைஞர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் பெற்று தந்திருக்கிறது.
மார்ச் 17-ம் தேதி அன்று வெளியாகும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.