‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரனின் இயக்கத்தில், ‘மெட்ரோ’ படத்தின் ஹீரோவான ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’.
சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த ‘ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.
கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய ஹீரோ ஷிரிஷ், “நான் இந்த ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றேன்.
வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய சண்டை ஏற்பட்டது. நானோ போலீஸ் உடையில், அதுவும் ரோந்து வாகனத்தில் உட்கார்ந்து இருந்ததால், ஒரு நபர் என்னிடம் வந்து ‘நீங்க போலீஸ்தானே? ஏன் இவர்களை நீங்கள் கட்டுப்படுத்த கூடாது?’ என்று கேட்டார். சில நிமிடங்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அதற்கு பிறகு நான் அவரிடம், ‘நான் நிஜ போலீஸ் இல்லை’ என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டேன்…” என்று நகைச்சுவையாக கூறுகிறார் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் கதாநாயகன் ஷிரிஷ்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் அவரின் முதல் படமான ‘மெட்ரோ’ திரைப்படத்தை பற்றி ஷிரிஷ் கூறுகையில், “என்னுடைய ‘மெட்ரோ’ திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் இருந்து கிடைக்கும் பாராட்டுகளை பார்க்கும்பொழுது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. தரமான திரைப்படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவிற்காக நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தரமான திரைப்படங்களை மட்டும்தான் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் தற்போது மேலும் வலு பெற்றுள்ளது..” என்கிறார்.