நடிகர் விஜய்பாபுவின் விவகாரமே தலையைச் சுற்ற வைத்தது என்றால் அடுத்தப் பிரச்சினையாக நடிகர் ஷம்மி திலகன் எழுப்பிய பிரச்சினையும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் ஷம்மி திலகன், பழம்பெரும் மலையாள நடிகரான திலகனின் மகன். இவரும் ‘அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். சென்ற ஆண்டு நடந்த ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தைத் தனது செல்போனில் படமாக்கியதாக ஷம்மி திலகன் மீது புகார் எழுந்தது.
மேலும் ஷம்மி திலகன் ‘அம்மா’ அமைப்பு பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் அவதூறாகப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. “அம்மா அமைப்பின் நிர்வாகிகள் மாபியா கேங் போல செயல்படுவதாக” ஷம்மி திலகன் குற்றம்சாட்டியதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பல முறை ஷம்மி திலகனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரிலும் வராமலும், கடிதம் மூலமும் விளக்கம் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஷம்மி திலகனை ‘அம்மா’ அமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக ஒரு தீர்மானத்தை அமைப்பின் நிர்வாகிகள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தீர்மானத்தை நடிகர் மம்மூட்டியும், ஜெகதீஷும் எதிர்த்துள்ளனர். “இந்தப் பிரச்சினையை இத்தோடுவிட்டுவிடலாம்” என்று ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால், அமைப்பின் தலைவரான மோகன்லால் இதை ஏற்கவில்லையாம். இத்தீர்மானத்தை ஓட்டெடுப்புக்குவிட.. பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
ஆனாலும் இந்தத் தீர்மானத்தை செயற்குழுவுக்கு அனுப்பி வைப்பதாகவும், செயற்குழு ஷம்மி திலகனிடம் விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் கடைசியாக தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் கடைசியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் பொருளாளரான நடிகர் சித்திக்கும், தலைவரான மோகன்லாலும் இதைத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு கொதிப்படைந்த நடிகர் ஷம்மி திலகன் உடனடியாக பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்து பரபரப்பாக பேட்டியளித்தார்.
“எங்களது குடும்பத்தின் மீதே ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மாபெரும் நடிகரான எனது தந்தை திலகனுக்கே உரிய மரியாதையை அவர்கள் தரவில்லை. என் அப்பாவுக்கு இந்தச் சங்கத்தில் அநீதி இழைக்கப்பட்டது. அவரைத் திட்டமிட்டு சங்கத்தில் இருந்து நீக்கினார்கள். இப்போது என்னையும் அதேபோல் இந்த ‘அம்மா’ அமைப்பில் இருந்து நீக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
நான் ஒருபோதும் ‘அம்மா’ அமைப்பினரை தரக்குறைவாகவோ, அவதூறாகவோ பேசவில்லை. யாருக்கும் பேட்டியும் அளிக்கவில்லை. இதுதான் உண்மை. இதை நான் அவர்களுக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட்டேன். அப்படியிருந்தும் அவர்கள் பழி வாங்கும் நோக்கோடு என் மீது நடவடிக்கை எடுக்க பாய்ந்துள்ளார்கள்.
பெண் உறுப்பினர்களை பாதுகாக்கும் வகையில் சங்கத்தின் சட்டத் திட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்று நடிகைகள் ரேவதியும், பார்வதி திருவோத்தும் வேண்டுகோள் வைத்தபோது அவர்களுக்காக நானும் சேர்ந்து குரல் கொடுத்தேன். அப்போதுதான் இந்த அமைப்பின் நிர்வாகிகள் என் மீது கோபமானார்கள்.
மேலும் இந்த அமைப்பில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் பண மோசடி செய்திருக்கிறார்கள். இது குறித்து மோகன்லாலிடம் 7 பக்க கடிதம் மூலமாக தெரிவித்திருந்தேன். அதன் பின்புதான் எங்கே நான் சங்தத்தில் இருந்தால் தாம் மாட்டிக் கொள்வோமோ என்றெண்ணிதான் சிலர் என்னை இந்த ‘அம்மா’ அமைப்பில் இருந்து நீக்க துடிக்கிறார்கள்.
இந்த ‘அம்மா’ அமைப்பைத் துவக்கியபோது நான் 4-வது ஆளாக உறுப்பினரானேன். என்னுடைய சொந்தப் பணத்தில்தான் முதன்முதலாக இந்த அமைப்பின் லெட்டர்பேடை நான் தயார் செய்தேன். இந்த அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான எனக்கே இந்த நிலைமையென்றால் எப்படி..?
‘அம்மா’ அமைப்பினர் தவறு மேல் தவறு செய்கிறார்கள். தற்போதைய நிர்வாகம் சரியில்லை. விஜய்பாபுவை பொதுக்குழுவுக்குள் அனுமதித்திருக்கவே கூடாது. வழக்கு விசாரணை முடியும்வரையிலும் அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் அவரை அங்கே அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சக நடிகைக்கு இவர்கள் காட்டும் மரியாதை அவ்வளவுதான் போலும்..!” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் நடிகர் ஷம்மி திலகன்.