full screen background image

‘பார்ட்டி’ படத்தில் பட்டயக் கிளப்பும் நடிகர் ஷாம்

‘பார்ட்டி’ படத்தில் பட்டயக் கிளப்பும் நடிகர் ஷாம்

‘தென்னிந்தியாவின் சல்மான்கான்’ என நடிகர்  சத்யராஜால் புகழாரம் சூட்டப்பட்டவர் நடிகர் ஷாம்.  

கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர். ரிஸ்க் எடுத்தவர்.  ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை. 

“இப்படி புறக்கணிக்கப்பட்டதற்காக வருத்தப்பட்டதில்லையா..?” என்றால் மெல்ல சிரிக்கிறார். “இல்லை. விருது கிடைக்காததில் வருத்தமில்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில்  அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன். 

மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை படமாக்கியிருந்தோம். அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர் மூலமாக  நடக்கவில்லை. ஆனால் ஜீ தமிழ் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது.

வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும். இப்போது அந்த மனநிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

படம் வெற்றி பெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்.

actor shaam-2 

இன்னொன்று, ஒன்று கிடைத்தால் நல்லது. கிடைக்கலைன்னா ரொம்ப நல்லதுன்னு நினைப்பதால் இந்த வருத்தம் இருப்பதில்லை. இன்னும் நிறைய படஙள் நடிக்கப் போகிறோம். காலங்கள் இருக்கு. கிடைக்காமலா போகும்…? அதுதானே யதார்த்தம்.

ஒன்று மட்டும் சொல்வதாக இருந்தால்,  விருது வழங்குபவர்களும் பெரிய படங்கள் என்று பாராமல் முக்கியமான  படங்கள் என்ன பேசியிருக்கிறது என பார்க்க வேண்டும். 

நல்ல இயக்குநர்களால் மட்டுமே சிறந்த கேரக்டர்கள் முடிவு செய்யப்படுகிறது. சரியாகச் சொல்லப் போனால் அந்த படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

இப்போது ஃபிஜி தீவில் ’பார்ட்டி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். நீங்கள் எதிர்பார்ப்பது இந்த பார்ட்டி படத்தின் மூலமும் நடக்கலாம்.

வெங்கட் பிரபு அண்ணன் இயக்கிய ‘மங்காத்தா’ அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

சிவா அண்ணன் ஒரு  நாள் போனில் கூப்பிட்டு  ‘கிளம்புங்க  ஃபிஜி’க்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன்.

‘பார்ட்டி’ படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய, ரசிகர்களின் மனதில் பதியக்கூடிய ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.  அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. இருப்பதே ‘பார்ட்டி’ பண்ற மாதிரிதான் இருக்கு. ஸோ, இதிலேயே என் இன்னொரு இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்.

எங்கே வேணாலும், யார்கூட வேணால்லும் நடிக்கலாம். ஆனால், என்னவாக நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார் கடைசிவரைக்கும் நல்லவனாகாமல் செம வில்லனாவே ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார்.  

நானும் ஏகப்பட்ட கதை கேட்டேன். சரியா ஹெவியா இல்லை எதுவும். இது அவர் சொன்னது, தனியொருவனுக்கு முன்னாடியே.. ஆனால் அரவிந்த்சாமிக்கு மாட்டிச்சி பாருங்க. மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார். இது மாதிரி நானும் பண்ணலாம். ஆனா செம வில்லன் ரோலா இருக்கணும். அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் அவை. ’தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.  

இப்போது எனது நடிப்பில் உருவான ‘காவியன்’ திரைப்படம் முடிந்துவிட்டது. இந்தப் படம் கார் ரேஸ் பற்றிய படம். அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. வழக்கம் போல கடின உழைப்பை இதில் உழைத்திருக்கிறோம்.. படம் விரைவில் வெளியாக இருக்கிறது…” என்றார் நடிகர் ஷாம்.

 

Our Score