நேற்றைய 2013-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் நிச்சயமாக கடுமையான ஏமாற்றமடைந்திருப்பது தமிழ்த் திரைப்பட நடிகர் ஷாம்தான்.
அவரது தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியாகியிருந்த ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் ஷாம். பல நாட்கள் தூங்காமல் விழித்திருந்து இயல்பாகவே கண்களில் வீக்கம் வரும் அளவுக்குக் காத்திருந்து அதன் பின்னர் அக்காட்சிகளை படமாக்கினார்கள்.
அந்த அளவுக்கு நடிப்பைக் கொட்டிய அந்தப் படத்திற்கு ஒரு விருதுகூட கிடைக்காதது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கும் என்று நினைக்கிறோம். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இது :
‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் நடித்ததில் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததா?
”சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. ‘6’ படத்துக்கு முன் என்னைப் பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப்படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது. பலவிதங்களில் திறமை காட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை ‘6’ படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
முன்பெல்லாம் கண்ணில்படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது.
ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று ‘6’ படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிக ரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.”
சொந்தமாக ‘6’ படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?
”படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்கவில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.”
சரியான வாய்ப்புகள் அமையாதபோது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி…?
”அப்படி ஒரு சூழல் வரும்போது நிச்சயம் செய்துதான் ஆக வேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாதபோது நம்மை நாமே நிரூபிக்க சொந்தப் படமெடுப்பதில் தவறில்லைதான்..”
மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா…?
”தேவைப்பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம்கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.”
இயற்கை 2, கிக். 2. எடுக்கப்படவுள்ளதாமே?
”எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம் ‘இயற்கை 2 ம் பாகம்’.. மட்டுமல்ல ‘கிக்-2’ ம் பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.”
நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?
”இது ஸ்கிரிட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.
தமிழ்த் திரையுலகில் எது உங்களுக்கான இடம்..?
”யார் யார் எங்கே எப்போது இருப்பது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. காலம்தான் முடிவு செய்யும். ஆனால் காலத்தின் மீது பழி போட்டு விட்டு சும்மா இருக்கக் கூடாது. நம் கடமையை, முயற்சியை, முன்னோக்கி வைக்கும் அடியை, சிறப்பாகச் செய்ய முடிந்ததை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலன் நிச்சயம் உண்டு. எனக்கான இடம் எது என்பது பற்றி ஆராய்ச்சி செய்து யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. அது வேண்டாத வேலை. இப்போது தேவை உழைப்பு, உற்சாகம், ஊக்கம், ஓட்டம்…”
– தெளிவாகச் சொல்கிறார் ஷாம்.









