full screen background image

கார்பரேட் நிறுவனங்களின் அக்ரிமெண்ட்டை கலாய்த்த சத்யராஜ்..!

கார்பரேட் நிறுவனங்களின் அக்ரிமெண்ட்டை கலாய்த்த சத்யராஜ்..!

விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ் நடிப்பில் இயக்குநர் கெளரவ் இயக்கியுள்ள படம் ‘சிகரம் தொடு’. இந்தப் படத்தை யு டிவி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்யராஜ் பேசும்போது, சினிமா துறையில் இருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அக்ரிமென்ட் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்தார்.

“ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யும்போது அவருடைய சீனியாரிட்டி என்ன, அனுபவம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அது இந்த கார்பரேட் கம்பெனிகளுக்குத் தெரியலை.. 

நீங்க எங்களிடம் ஒப்பந்தம் போடும்போது கிட்டத்தட்ட 100 விதிகளுக்கும் குறையாத அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்குறீங்க.. அதை நாங்க படிச்சு பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்கு கோபம் வருது.

நான் அதைப் படித்துப் பார்த்தேன். அதில், ‘நன்றாக நடிக்க தெரியாவிட்டால் பாதியிலேயே தூக்கி விடுவோம்..’, ‘டப்பிங் சரியாக பேச வராவிட்டால், உங்களுக்கு பதிலாக வேறு ஆளை வைத்து பேச வைப்போம்…’ என ரூல்ஸை அடுக்கியிருக்காங்க..  அதாவது நான் டப்பிங் பேச வரலைன்னா.. எனக்கு டப்பிங் பேச சரியா தெரியலைன்னா அவங்க வேற யாரையாவது டப்பிங் பேச வைப்பாங்களாம்..

என் வேஷத்துக்கு வேற குரலை போட்டால் படம் ஓடுமா..? நான்லாம் ‘தகடு தகடு’ன்னு வசனம் பேசி கைதட்டல் வாங்கி இத்தனை வருஷமா பீல்டுல வண்டி ஓட்டிட்டு இருக்கிறவன்.. இந்தக் குரலுக்கு பதிலா வேற குரலா..? இது போல இவங்களால கமல் ஸார்கிட்ட சொல்ல முடியுமா..? எங்களை மாதிரி சீனியர்கிட்ட அக்ரிமென்ட் வாங்குறப்ப யாரு என்னன்னு கொஞ்சம் ஆள் தராதரம் பாத்து ரூல்ஸ் போடுங்க…” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயனும் மேடையில் இருந்ததால் கொஞ்சம் கூலான சத்யராஜ் பின்பு மீண்டும், “நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்..? இத்தனை பேரை வச்சு வேலை வாங்குறதுன்னா சாதாரண விஷயமா..? அதுக்கு இந்த மாதிரில்லாம் அக்ரிமெண்ட்ல எழுதி வாங்குனாத்தான் உங்களுக்கு சேப்டி மாதிரி தெரியுது….” என மென்மையாக சிரித்தபடி பேசி தனது கோபத்தை மறைத்துக் கொண்டார்.

இது குறித்து நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற சிகரம் தொடு பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

Sigaram Thodu Press Meet Stills (14)

இதற்கு பதிலளித்த தனஞ்செயன், “சத்யராஜ் சார் இதை சீரியஸா கேட்கலை. சும்மா கலாய்க்கிற மாதிரித்தான் பேசினார். அக்ரிமெண்ட்ங்குறது  கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒரு தவிர்க்க முடியாத விதிமுறை. அந்த அக்ரிமெண்ட் யாரிடமும் பிரச்சனை பண்ணுவதற்காக இல்லை.. ஒரு சம்பிரதாயமான நடைமுறைதான். யாருமே அக்ரிமெண்ட்படிதான் எந்தப் படத்துலேயும் ஒர்க் பண்றதில்லை.. நாங்கள் வேலை பார்ப்பதும் வேலை வாங்குவதும் பரஸ்பரம் புரிந்துணர்வினால் மட்டும்தான். இந்தப் படத்திலும் அப்படித்தான் வேலை பார்த்திருக்கிறோம். இந்தப் படத்துலகூட ஒப்பந்தத்துல இருந்ததைவிட கூடுதலா 3 நாள் நடிச்சுக் கொடுத்தார் சத்யராஜ் ஸார். சமயத்துல அதுல இல்லாத விஷயத்துல நாங்களும் விட்டுக் கொடுப்போம். ஆர்ட்டிஸ்ட்டும் எங்களுக்காக விட்டுக் கொடுப்பாங்க.. இது ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டி.. அவ்ளோதான்.. இதை நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.. ” என்று கேட்டுக் கொண்டார்.

Our Score