தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ். அரசனாக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, அந்த கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்தவர் நடிகர் சத்யராஜ்.
‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் தனி மரியாதையை பெற்ற சத்யராஜ், சமீபத்தில் வெளியான ‘ஜாக்சன் துரை’ திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் அள்ளிச் சென்றுள்ளார்.
மேலும், மேலும் ரசிகர்களுக்கு புதுமையை வழங்க வேண்டும் என்று, தனித்துவமான கதை களங்களை தேடி கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ் தற்போது புதுமுக இயக்குநரான கார்த்திக் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத கிட்னாப் – திரில்லர் டைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘நாதாம்பாள் பிலிம் பாக்டரி’ சார்பில் நடிகர் சத்யராஜே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் உருவானவிதம் பற்றிப் பேசிய நடிகர் சத்யராஜ், “இயக்குநர் கார்த்திக் ஒரு நாள் என்னிடம் வந்து இந்தக் கதையை சொன்ன அடுத்த நொடியே, இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை சட்டென்று என்னை கவர்ந்துவிட்டது.
இதுவரை நான் நடித்த கதாப்பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த கதாப்பாத்திரம். இந்தப் படத்தில் ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நடிக்கிறேன். தொகுப்பாளர்களும், எப்.எம். ரசிகர்களும் ஓயாமல் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதும், அதை நான் கண்காணிப்பதும், எனக்கு புதுவித அனுபவமாய் இருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்த படத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார்.
இப்போதெல்லாம் எல்லாவிதத்திலும் புதுமுக இயக்குநர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக்கும் ஒரு உதாரணம். நான் தொடர்ந்து இது போன்ற திறமையான புதுமுக இயக்குனர்களுடன் பணிபுரிவதை பெரிதும் விரும்புகிறேன்..” என்கிறார் நடிகர் – தயாரிப்பாளர் சத்யராஜ்.
“ஒரு ரேடியோ தொகுப்பாளருக்கும், கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை கரு. சத்யராஜ் சார் என்றாலே நையாண்டியான வசனங்கள்தான் ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில், இந்த படத்திலும் சத்யராஜ் சாரின் நையாண்டியான வசனங்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கலாம்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் புதுமுக இயக்குநர் கார்த்திக்.
சந்தோஷ் இசையமைப்பாளராகவும், ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.









