தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை டைரக்டர் பாரதிராஜா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
இந்த விழாவில் சரத்குமார் பேசும்போது, “முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள், வரவு செலவு கணக்கை எழுதத் துவங்கும்போது முதலில் ‘லாபம்’ என்றுதான் எழுதுவார்கள். இப்போது, ‘நஷ்டம்’ என்றே எழுதத் தொடங்குகிறார்கள். சினிமா அப்படி மாறி விட்டது.
தற்போது நிறைய படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்களில் எந்த காட்சியில், எந்தப் படம் ஓடுகிறது என்று தெரியவில்லை. ஒரு படம் பார்க்க 12 மணி காட்சிக்கு போனால், அந்த படத்தை 2 மணிக்கு மாற்றி விட்டோம் என்கிறார்கள். நாள் கணக்கில் படங்கள் ஓடுவது குறைந்து, இப்போது காட்சிக் கணக்கில் படங்கள் ஓடுகின்றன. இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் 30 நாட்கள் இடைவெளி இருக்கும்படி, படங்களின் வெளியீடுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் முறைப்படுத்த வேண்டும். இதை, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
‘ஒரு தலை ராகம்’ படம் வெளிவந்தபோது, மூன்று நாட்கள் கூட்டமே இல்லை. நான்காவது நாளில் இருந்து கூட்டம் அதிகரித்து, படம் ‘சூப்பர் ஹிட்’ ஆனது. திருட்டு வி.சி.டி, டி.வி.டி. ஆகிய எந்த தடைகள் வந்தாலும், படம் நன்றாக இருந்தால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பார்கள்.’’ என்றார் சரத்குமார்.
30 நாட்களுக்கு ஒரு முறை படங்களை வெளியிட வேண்டுமென்பதெல்லாம் சாத்தியமா நாட்டாமை ஸார்..?
வாரத்துக்கு 5 படங்களை ரிலீஸ் செய்தாலே ஒரு வருடத்தில் தயாராகும் அனைத்து படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாது. திரையரங்குகள் குறைவாக இருப்பதாலும், அவைகள் கிடைக்காமல் இருப்பதாலும் ஏற்கெனவே சென்சார் சர்டிபிகேட் வாங்கியும் 500-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன.
இதில் 30 நாட்கள் இடைவெளியென்றால் எப்படி ஸார்..?