நாலாபுறமும் ஏவுகணைகளை போல கேள்விக்கணைகள் வந்து குவிந்தாலும் மிக எளிதாக பதில் சொல்லியபடியே போய்க் கொண்டிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
நடிகர் சங்க விவகாரம் பற்றி நேற்று நெல்லையில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் சரத்குமார் பேசியது இது:
“நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தை நடிகர்கள் விஷால், நாசர் போன்றவர்கள் பூதாகரமாக எழுப்பி வருகிறார்கள்.
இந்த கட்டடம் கட்டுவது தொடர்பாக நடிகர் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் முறைப்படி விவாதிக்கப்பட்டது. அப்போது, அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு மாற்று கருத்து இருந்திருக்குமானால் அப்போதே இப்பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.
இப்போது, உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தை கிளப்புகிறார்கள். நடிகர் ராதாரவி 16 ஆண்டு காலம் தலைவரக இருந்தார். பின்னர் அவர்தான் நடிகர் விஜயகாந்த்தையும், என்னையும் தலைவர் பொறுப்புக்கு அழைத்து வந்து அழகு பார்த்தார்.
இப்போது போட்டியிடுபவர்கள் தவறான கருத்துகளை பரப்புவதுதான் வருத்தம் அளிக்க செய்கிறது.
நடிகர் சங்க தேர்தல் என்பது 3 ஆயிரம் பேர் வாக்களிக்க கூடிய ஒரு விஷயம். நாட்டையே, தமிழகத்தையோ உலுக்கும் பிரச்னை அல்ல. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி எழுதாமல் நடிகர் சங்க தேர்தலை பற்றி எழுதி ஊடகங்கள்தான் இந்தப் பிரச்சினையை பெரிதாக்குகின்றன. அப்படி செய்ய வேண்டிய அவசியம் இருப்பததாக எனக்கு தெரியவில்லை..” என்று சொல்லியிருக்கிறார் சரத்குமார்.