full screen background image

“நான் எப்போதும் நல்ல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்..” – நடிகர் சரத்குமார் பேட்டி

“நான் எப்போதும் நல்ல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்..” – நடிகர் சரத்குமார் பேட்டி

பொன்னியின் செல்வன்’ படம் நாளை மறுநாள் வெளியாவதையொட்டி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் சரத்குமார் பேசும்போது, “பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள்.

முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன். சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன்.. நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்தவன். 64 விழுப்புண்களை பெற்ற மாவீரன். பொன்னியின் செல்வன்’ கதையைப் படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன். அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்.

மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களில்தான், இந்த படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்குகூட, இந்தப் படத்திற்குப் பிறகு அவர்களைப் பற்றி தெரிய வரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரிய வரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும்.

இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும். இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா புரொடக்ஷனுக்கும், தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ்க்கும் நன்றி.

கதாநாயகனாக நடித்த நான் இப்போது அண்ணன், அப்பா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள்தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள்தான் நல்ல நடிகராக இருக்க முடியும். நான் எப்போதும் நல்ல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் பல்வேறு தரப்பட்ட வேடங்களையும் விரும்பி தொடர்ந்து நடித்து வருகிறேன்.

தற்போது நான் 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன். எப்போதும் போல் எனக்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தார் நடிகர் சரத்குமார்.

கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தபோது, “பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி தானும் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். எந்த கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக அமைத்துக் கொடுப்பவர் மணிரத்னம். எனவே ரஜினி நடித்திருந்தாலும் அவர்தான் கேரக்டரில் ஜொலித்திருப்பார்.

கமலுக்கும் எனக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் அதையே நினைத்து கொண்டிருந்தால் பிரச்சனை பெரிதாகும். சமீபத்தில் விக்ரம்’ படம் பார்க்க என்னை அழைத்திருந்தார். அதுபோல விக்ரம்’ படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கும் அழைத்திருந்தார். அப்போதும் அவரை சந்தித்தேன்.

வாரிசு’ படத்தில் விஜயுடன் நடித்தது நல்ல அனுபவம். அருகில் இருந்து அவரது நடிப்பை பார்த்தேன். உடலை கட்டுவதற்காக வைத்திருப்பது எப்போதும் நல்லது. தினமும் உடற்பயிசி செய்ய வேண்டும். என் தந்தை புகை, மது ஆகியவற்றை பழக வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எனவே எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது.

பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி இரண்டிலும் இருந்து கூட்னணிக்கு எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.  எனது கட்சி பணியிலும் நான் செயல்பட்டு கொண்டுதான் வருகிறேன். இப்போது ஆன்லைன் மூலமாக ஆலோசனைகள் செய்து வருகிறேன்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் காதல், கம்பீரம் எல்லாம் இருக்கும். எனக்கு பிடித்த நடிகைகள் சரோஜாதேவி, பத்மினி, சாவித்திரி. பொன்னியின் செல்வன்’ படத்தில் எந்த நடிகையைப் பிடிக்கும் என கேட்டு மாட்டி விடாதீர்கள். எனக்குப் பிடித்தவர் ராதிகாதான்.

தற்போது என் கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை உள்ளன. இது என்னுடைய ரீ என்ன்ட்ரீ அல்ல. முதல் என்ட்ரீயே இன்னும் முடியவில்லை. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரத்தில் நடித்தது உண்மைதான். அது தடை செய்யப்படவில்லை. தடை செய்திருந்தால் நான் நிச்சயம் அதை செய்திருக்க மாட்டேன். அதுபோல டாஸ்மாக்கையும் தடை செய்தால் நல்லதுதான்…* என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகர் சரத்குமார்.

Our Score