நடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். நாசர் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்ததுடன் இல்லாமல் நாசரின் வேட்பு மனுவை முன் மொழிந்தும் கையெழுத்திட்டுள்ளார்.
ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி விஷால் அணியினரின் கூட்டத்திற்கு தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை கொடுத்து மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். இப்போது கமல்ஹாசன் வெளிப்படையாகவே ஆதரவை தெரிவிக்க.. எதிரணியினர் மேலும் கோபமடைந்தனர்.
இந்த நிலையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த நடிகர் சரத்குமார் விஷால் அணியினரின் பின்புலத்தில் நடிகர் கமல்ஹாசன் இருப்பதாகவும், அவர்தான் விஷால் அணியினரை தூண்டிவிடுவதாகவும் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “விஸ்வரூபம்’ பட பிரச்சனையில் இருந்துதான் கமல்ஹாசன் நடிகர் சங்கத்தை குற்றம்சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன், அதுபோல் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு பிரச்சனை வந்தபோதும் நான் தலையிட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்காக கமல்ஹாசன் ஒரு நன்றிகூட எனக்கு தெரிவிக்கவில்லை. நன்றியை எதிர்பார்த்து நானும் அந்த காரியங்களை செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலிலும் எதிர் அணியினரை கமல்ஹாசன்தான் தூண்டி விடுகிறார்..” என்றார்.
விஸ்வரூபம் படப் பிரச்சினையின்போது அதிமுகவுடன் கூட்டணி கட்சியாக இருந்ததால் அரசை எதிர்த்து ஒருவார்த்தைகூட பேசாமல் ‘அரசுடன் பேச்சுவார்த்தை மூலமாக பணிந்து நடந்து பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம்’ என்று கமலுக்கு அறிவுறுத்தினார் சரத்குமார்.
இதுதான் கமலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு கலைஞனுக்கு உரிய நேரத்தில் ஆதரவுக் கரம் நீட்டாமல் அதிகார வர்க்கத்திற்கு சலாம் போட சொன்னதற்காக அப்போதே சரத்குமார், கமலின் குட்புக்கில் இருந்து விலக்கப்பட்டது அப்போதைய கமல்ஹாசனின் நடவடிக்கைகளில் இருந்தே தெரிய வந்தது..!
இப்போது முழுமையாக வெளியில் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்..!