ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த மாதம் 20-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர்.
இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது.