‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது சொந்தத் தயாரிப்பில் தானே கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தினை நடிகர் சந்தானம் துவக்கிவிட்டார்.
சந்தானத்தின் சொந்த பட நிறுவனமான ‘Hand Made films’-தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி மற்றும் அகிலா கிஷோர் நடிக்கவுள்ளனர். பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் கோபிநாத். இசையமைப்பாளராக A.R. ரகுமானிடம் பயின்ற சந்தோஷ் தயாநிதியை அறிமுகப்படுத்துகிறார் சந்தானம்.. மேலும் பல்வேறு நட்சத்திரங்களும் நடிக்க உள்ள இந்த நகைசுவை கலந்த காதல் கதையின் மூலம் இயக்குனர்களாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகின்றனர் முருகா-ஆனந்த் என்கிற இரட்டையர். விஜய் டிவியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியை இயக்கியவர்கள் இந்த இரட்டையர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி கூறும் இயக்குநர்கள், “எங்களை அடையாளம் கண்டு, இன்று எங்களை இயக்குனராக உயர்த்திய சந்தானம் சாருக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
இந்த படம் முழுக்க முழுக்க சந்தானம் படமாகவே இருக்கும். அவர் ரசிகர்கள் அவரிடம் என்ன விரும்புகிறார்களோ அதை நாங்கள் நிறைவு செய்வோம்.
படத்தின் தலைப்பைப் பொறுத்தவரை, அவரது ரசிகர்கள் விரும்பும்வகையில் அவரது முந்தைய படங்களை போலவே நல்லதொரு கேட்சிங்கான தலைப்பை வைக்க வேண்டும் என்பதால் அது பற்றி தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறோம்..” என்றனர்.
அன்பான சந்தானத்தின் ரசிகர்களே.. நீங்களும் உங்களது தேடுதல் வேட்டையை நடத்தி ஒரு நல்ல தலைப்பை உங்களது தலைவனுக்குச் சொல்லுங்களேன்..!