தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகர் சலீம் கவுஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
புனே திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சியைப் பெற்றிருந்த சலீம் கவுஸ், ஆரம்பத்தில் சென்னையில் நடந்து வந்த ஆங்கில நாடகங்கில் நடித்து வந்தார்.
பின்பு பிரதாப் போத்தனின் உதவியால் அவர் இயக்கி கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் ‘ஜிந்தா’ என்ற வில்லன் கேரக்டரில் நடித்துதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதற்குப் பின்னர் ‘சின்ன கவுண்டர்’, ‘திருடா திருடா’ போன்ற படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானாலும், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வேதநாயகம் என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம்.
2010-ல் இந்தியில் வெளியான ‘வெல்டன் அப்பா’ படத்துக்குப் பிறகு, ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள திரில்லர் படமான ‘கா – தி ஃபாரஸ்ட்’ படத்தில் ஆண்ட்ரியா வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராகவும், சலீம் கவுஸ் வன விலங்கு காப்பாளராகவும் நடித்துள்ளனர்.
தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் சலீம்.
இயக்குநர் பரதன் இயக்கிய கிளாசிக் மலையாளத் திரைப்படமான ‘தாழ்வாரம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், ஷாருக்கான் மற்றும் மாதுரி தீட்சித்தின் ‘கொய்லா’, ‘சாரன்ஷ்’, ‘முஜ்ரிம்’, ‘ஷபத்’, ‘சோல்ஜர்’, ‘ஏகேஎஸ்’, ‘இந்தியன்’ ‘ஸ்வர்க் நரக்’, ‘மந்தன்’, ‘கலியுக்’, ‘சக்ரா’, ‘சரண்ஷ்’, ‘மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ’, ‘திரிகல்’, ‘அகாத்’, ‘த்ரோஹி’, ‘சர்தாரி பேகம்’, ‘சிப்பாய்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் வேடங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் சலீம் கவுஸ்.
மும்பையில் குடியிருந்த சலீம் கவுஸ் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.