full screen background image

“பேருந்தில் நடக்கும் சண்டை காட்சியை 10 நாட்கள் படமாக்கினார்கள்…” – வில்லன் ரோஹித் பதக் பேட்டி

“பேருந்தில் நடக்கும் சண்டை காட்சியை 10 நாட்கள் படமாக்கினார்கள்…” – வில்லன் ரோஹித் பதக் பேட்டி

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் பனேசிங் பவேரியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ரோஹித் பதக், படம் வெற்றி பெற்றதையடுத்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தான் நடித்த முதல் தமிழ்ப் படமே வெற்றி என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் ரோஹித் பதக், படத்தில் நடித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, “நான் எப்போதும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். இயக்குநர் வினோத்துதான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதை பார்த்து. அவருடைய உதவி இயக்குநர்களிடம், என்னை படப்பிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.

கார்த்தி போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக் கூடிய சிறந்த நடிகர். என்னோடு நட்பாக பழகினார். பல காட்சிகளில் எனக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

பஸ் மீது படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை 10 நாட்கள் படமாக்கினார்கள். தினமும் அந்த காட்சியை படமாக்கும்போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும்போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம் பிடித்தார் தினேஷ்.

படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ.. எல்லோரும் படத்தை பற்றி என்ன எழுத போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் இப்போது படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது…” என்றார் ரோஹித் பதக்.

Our Score