மக்கள் பாசறை வழங்கும், நடிகர் ஆர்.கே. நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே., நடிகை நீத்து சந்திரா, கோமல் சர்மா, ‘காமெடி டைம்’ அர்ச்சனா மற்றும் படத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான v. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆர்.கே பேசுகையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
“எனது அடுத்த படத்தின் பெயர் ‘பைரவா.’ தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதுவரை நான் மலையாள இயக்குனரான ஷாஜி கைலாஷ் அவர்களுடன் மட்டுமே பணியாற்றுகிறேன் என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த திரைப்படம் அமையும். இப்படம் குழந்தைகளை வெகுவாகக் கவரும் வகையிலான கதையம்சத்தை கொண்டதாக இருக்கும்.
இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக சிரத்தை எடுத்து அமெரிக்கா சென்று சண்டைப் பயிற்சி பெற்று இப்படத்தின் மூன்று முக்கிய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். மாஸ்டர் கனல் கண்ணன் சண்டை காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததை வெகுவாகப் பாராட்டினார்
‘வைகை எக்ஸ்பிரஸ்’ தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அப்படியொரு திட்டத்துடன்தான் நான் வந்திரு்க்கிறேன்.
படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை என்கிறோம். இது என்ன நியாயம்..?
ஏர்செல், ஏர்டெல் என செல்போனுக்கு எல்லா நெட்ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்கு கடை விற்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஏன் சினிமாவுக்கு இருக்கக் கூடாது..?
பத்து விநியோகஸ்தர்கள் இருக்கும் சினிமாவில் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்த புதிய திட்டம்.
சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும். ஆனால், என்னுடைய ‘வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதேபோல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.
அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இது தமிழ் திரையுலகில் நிச்சயம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
ஒரு திருட்டு விசிடி விற்கிறவன் அவனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரத்துடன் வீட்டிலேயே சிடியைக் கொடுத்துவிட்டு, இது தரமாக இருந்தால் மட்டும் பணம் தருமாறு கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும்போது நாம் ஏன் இதை செய்து காட்ட முடியாது..?
இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கேற்றார்போல் நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த விநியோக முறையை ‘வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.
இதற்காக சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து இதை ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன்.
இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் தன் படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்க வழிவகை செய்ததில்லை. வீட்டில் அவனுக்கு ‘வெட்டிப் பயல்’, ‘சினிமா பைத்தியம்’ என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும்.
எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன்…” என்று நடிகர் ஆர்.கே. கூறினார்.
நிகழ்ச்சியில் வசனகர்த்தா வி.பிரபாகர், நடிகைகள் நீத்து சந்திரா, கோமல் சர்மா, அர்ச்சனா ஆகியோரும் பேசினார்கள்.
தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர் சங்கமும் மனம் வைத்தால் இதை வெற்றிகரமாக நடத்தலாம்..!