லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் மல்டி ஸ்டார்களைக் கொண்ட பிரம்மாண்டமான படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ரகுமானும் இணைகிறார் என்பது புதிய செய்தியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே ‘பொன்னியின் செல்வன்’ ஏகப்பட்ட நடிகர், நடிகைகளை கொண்டு தயாராகி வருகிறது.
கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில்தான் ‘நிழல்கள்’ ரவி நடிக்கவிருந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனால் பார்த்திபன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கப் போகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த 2021 புத்தாண்டு ரகுமானை பொறுத்தவரை மிகுந்த உற்சாகமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் பிரபல தெலுங்கு ஹீரோவான கோபிசந்துடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ரகுமான்.
இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடிக்கும் இன்னமும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் அஹமத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி ஆகியோருடன் ரகுமானும் இணைந்து நடிக்கும் படமான ‘ஜன கன மன’, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களும் தயாராகி வருகிறது.
இப்படி தமிழ், தெலுங்கில் பிசியாகவே உள்ள ரகுமான் மலையாளத்தில் புதுமுக இயக்குநரான சார்ல்ஸ் ஜோசபின் இயக்கும் ‘சமரா’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது.
2021-ம் ஆண்டு ரகுமானுக்கு பிசி ஆண்டாக அமைந்திருக்கிறது எனலாம்.