full screen background image

“என் ஈகோவையும் மீறி பாராட்ட வைத்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் நரேன்…” – நடிகர் ரகுமானின் பாராட்டு..!

“என் ஈகோவையும் மீறி பாராட்ட வைத்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் நரேன்…” – நடிகர் ரகுமானின் பாராட்டு..!

மிக, மிக சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் ரகுமான். சின்ன வயதிலேயே மலையாளப் படவுலகில் நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாக பரிமாணித்து.. தமிழிலும் பல சிறந்த படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் ரகுமான்.. தற்போது காலத்தின்போக்கில் சிறந்த குணச்சித்திர கேரக்டர்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Thuruvangal-16 Movie Posters

இவருடைய நடிப்பில் சென்ற ஆண்டின் கடைசியில் வெளியான ‘துருவங்கள்-16’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என்று அனைவரின் பாராட்டையும் ஒட்டு மொத்தமாகப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரகுமான் படத்தின் வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். அதே சந்தோஷத்தோடு படத்தின் வெற்றி பற்றியும், இந்தப் படத்தில் தான் நடித்த அனுபவத்தைப் பற்றியும் மீடியாக்களிடம் பேசினார்.

page-stoper-850x420-copy

நடிகர் ரகுமான் பேசும்போது, “நான் சிவாஜி, மம்முட்டி, மோகன்லால், சிவகுமார்  போன்ற பெரிய, பெரிய ஜாம்பவான்களுடன் நடித்து இருக்கிறேன். அஜீத், சூர்யா என இப்போதைய நடிகர்களுடனும் நடிக்கிறேன். பாலச்சந்தர், பத்மராஜன். பரதன் தொடங்கி நான்காவது தலைமுறையாக இப்போதைய குறும்படம் மூலம் வருகிற இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கிறேன்.

நான் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் நடித்து அடுத்து வெளியாகப் போகும் ‘பகடை ஆட்டம்’ படத்தில்கூட போலீஸ் இன்ஸ்பெக்டராகத்தான் நடித்து இருக்கிறேன்.

இந்த நேரத்தில்தான் கார்த்திக் நரேன் என்னிடம் கதை சொல்ல வந்தார். எடுத்த எடுப்பிலேயே “போலீஸ் வேடம் ஸார்..” என்றார். ஐயோ என்னை விட்ருங்க.. நிறைய பண்ணியாச்சு.. என்னை விட்ருங்க.. வேறு ஆளைப் பாருங்கன்னு சொன்னேன். கார்த்திக் பள்ளி மாணவன் போல இருந்தார். வயசு 21ன்னு சொன்னார். அதுனாலேயும் எனக்கு அவர் மேல நம்பிக்கை வரலை, திருப்பி அனுப்பிட்டேன்.

pop-ad-750x375-copy

ஏன்னா.. நான் நிறைய புதுமுக இயக்குநர்களில் படங்களில் நடித்து காயம்பட்டு இருக்கிறேன். பொதுவாக இப்போதெல்லாம் வரும் இளைஞர்கள் அழுத்தமான கதையில்லாமல் விஷூவலில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதனால் கதையைக் கேட்டு இம்ப்ரஸாகி நடித்தால் கடைசியில் படம் நம்மை ஏமாற்றமாகி விடுகிறது. இது போன்ற அனுபவமெல்லாம் எனக்கு நிறைய இருந்ததால் கார்த்திக்கை  தவிர்க்கவே நினைத்தேன்.

ஆனால் அவர் விடுவதாக இல்லை. இன்னொரு தடவையும் பார்க்க வந்தார். இந்தக் கேரக்டரில் நீங்கதான் ஸார் நடிக்கணும்னு பிடிவாதமா இருந்தார். சரியென்று வேண்டாவேறுப்பாக கதை கேட்டேன். முதல்ல கதையைக் கேட்டதும் பரவாயில்லையே என்றுதான் தோன்றியது.

இருந்தாலும், அப்போதுதான் ‘பகடை ஆட்டம்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்து முடித்து இருந்தேன். உடனே திரும்பவும் போலீஸ் வேடம் செய்யணுமா என்று நினைத்தேன்.

1400x400-px-copy

ஆனால் கார்த்திக் நரேன் கதை சொன்னதோடு மட்டுமில்லாமல் படத்தில் வேறு என்னென்ன கேரக்டர்கள் இருக்கின்றன என்பதை விளக்கி கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பில் வைத்திருந்த ஸ்டோரி போர்டை காட்டினார்.

அந்த அனிமேஷன் ஸ்டோரி போர்டில் ட்ரெய்லர், டீஸர் எல்லாவற்றையும் வீடியோவாக தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை எனக்குக் காட்டினார்கள். எத்தனை நாள் படப்பிடிப்பு.. எங்கெங்கு படப்பிடிப்பு என்பதைக்கூட பக்காவாக ஷெட்யூல் போட்டு வைத்து இருந்தார்கள்.

இதில்தான் நான் மயங்கிவிட்டேன். படத்துக்கு யார் ஒளிப்பதிவாளர், யார் இசையமைப்பாளர், யார் ஒலிப்பதிவாளர் என்ற அவரது குழுவினர் அனைவரையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.

அப்போதும் நான் பல சந்தேகங்களைக் கேட்டேன். பல கேள்விகளை கேட்டு கார்த்திக்கை மடக்கினேன். எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் கார்த்திக். அந்த திட்டமிடலுக்காகவே வியந்து ஒப்புக் கொண்டு இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பும் திட்டமிட்டுதான் நடந்தது.

கார்த்திக் நரேன் மாதிரியான வியப்பூட்டும் இளைஞர்களும் சினிமாவில் இருக்கிறார்கள். என்னை எந்த கேள்வியும் கேட்கவிடவில்லை. அந்த அளவுக்குத் தெளிவாக எல்லாவற்றையும் பக்காவாக செய்து முடித்தார்கள்.

D-16-working-stills-4

படம் தயாரானதும் போட்டுக் காட்டினார்கள். படம் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். கார்த்திக்கை உடனேயே பாராட்டணும்னு தோணுச்சு. ஆனால் என்க்குள்ள இருந்த ஈகோத்தனம் உடனேயே அதைத் தடுத்தது. கடைசியாக அவரை நேரில் பார்த்தவுடன் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். என் கேரியர்ல எனக்கு மிகப் பெரிய பெயரைச் சொல்லப் போற படம்.. மிக்க நன்றி..’ என்று சொல்லி பாராட்டினேன்.

இந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் நான் நடித்ததை பாராட்டி நிறைய பேர் எனக்கு போன் செஞ்சு பாராட்டினாங்க. அதுல ஒரு போன்கால்தான் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்திச்சு. அது சூப்பர் ஸ்டார் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரின் பாராட்டு. அவங்களே எனக்கு போன் பண்ணி, ‘படம் பார்த்தேன். உன் நடிப்பு பிரமாதம்’னு பாராட்டுனாங்க.

D-16 working-stills-5

முப்பது வருஷம் கழிச்சு என் நம்பரை தேடிக் கண்டு பிடிச்சு அவங்களை பேச வைத்திருப்பதுதான் இந்தப் படத்தோட வெற்றி. அதுக்காக இயக்குநர் நரேன் கார்த்திக்குக்குத்தான் நான் நன்றி சொல்லணும். ஏன்னா, ஷோபா அம்மாவோட பாராட்டு நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம்..

நான் என்னுடைய துவக்கக் காலத்தில் ‘நிலவே மலரே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஸார்தான். அப்போது படப்பிடிப்பு நடைபெறும் நேரத்தில் எஸ்.ஏ.சி.க்கு மதிய சாப்பாட்டை ஷோபா மேடம்தான் கொண்டு வருவாங்க. அப்போது எனக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டு வருவார். அந்தப் பட ஷூட்டிங்கப்போ நிறைய நாட்கள் நான் அவங்க வீட்டுச் சாப்பாட்டைத்தான் சாப்பிட்டிருக்கிறேன். அதுக்கப்புறம் அவங்களோட ‘டச்’ விட்டுப் போச்சு. இத்தனை வருஷம் கழிச்சு போன் செஞ்சு பாராட்டுனது நான் ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.

இந்தப் படத்தின் அமோக வெற்றிக்கும், கிடைத்த பெயருக்கும் பத்திரிகையாளர்களாகிய நீங்கதான் முதல் காரணம். உங்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆதரவும் எங்கள் படத்துக்குக் கிடைத்ததால்தான் இன்னிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. அதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார் ஆனந்தக் கண்ணீருடன்..!

 

Our Score