‘பசங்க ‘படத்தின் மூலம் 2009-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற நடிகர் ஸ்ரீராம், தற்போது மலையாளப் படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.
ப்ளூம் இண்டர்நேஷனல் (Bloom International) என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட்'( EXIT) எனப் பெயரிடப்பட்டுள்ள மலையாளத் திரைப்படத்தில்தான் தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார்.
அண்மையில் ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘நவரசா’ படத்தில் இடம் பெறும் ‘ரௌத்திரம்’ கதையிலும் ஸ்ரீராம் நாயகனாக முத்திரை பதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 15-ம் தேதி தைப் பொங்கல் முதல் கேரளாவின் குட்டிக்கணம் மலைப் பகுதியிலும், பாலக்காட்டிலும் தொடர்ந்து இரவு பகலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே ஸ்ரீராம் தனது கதாபாத்திரத்துக்காக செய்து கொண்ட மெனக்கெடலைக் கண்டு வியந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், ‘எக்ஸிட்’ திரைப்படத்தை… தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர்.
திட்டமிட்ட 45 நாள் படப்பிடிப்பில் தற்போது 25 நாட்கள் முடிந்த நிலையில் மீதம் உள்ள நாட்களில் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பினை நடத்தி முடிக்கவுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், இயக்குநர் ஏ.எல்.விஜய் ‘Zee-5’ ஓடிடி தளத்திற்காக புதிய வெப் சீரிஸில் ஸ்ரீராமை நடிக்க வைக்கிறார். ‘டான்சிங் டீன்ஸ்'(Dancing Teen’s) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸில் ‘லட்சுமி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தியா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









