full screen background image

தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய நடிகர் பார்த்திபன்

தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய நடிகர் பார்த்திபன்

எதையுமே புதுமையாகவும், வித்தியாசமாகவும் செய்வதில் வல்லவரான  இயக்குநர் மற்றும் நடிகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், சமீபத்தில் தனது பிறந்த நாளையும் சற்று வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்.

தன்னுடைய பிறந்த நாளன்று சினிமா பிரபலங்களுடன் ஜெய் பீம்’ படத்தின் உண்மை நாயகனான நீதியரசர் சந்துருவை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி.. ஒரு விழாபோல் நடத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு இது :

“சமீபத்தில் என் பிறந்த நாள் வந்தது. பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. காரணம் என் தாயின் வயிற்றில் இருந்து உருவமாக நான் வெளியில் வந்த நாளைவிட, ஒரு கலைஞனாக பார்த்திபன்’ என்ற பெயரிட்டு என்னை இந்தத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் திரு.பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.

1989, 1990-களில் என் பிறந்த நாளின்போது, மிகப் பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்தித் தாள்களில், தினத் தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் அவர்கள் அப்போது என்னிடம், ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்படும். அதனால் இது வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன்  என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை.

நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அதுதான் உண்மை. ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின்புதான் தெரிகிறது. இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று, அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம். மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போதுகூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி, கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர் பிச்சை தந்தார்கள். அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை.

இவ்வருடம் அக்குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும்போது எனக்கு என்ன தோன்றியதென்றால் அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.

பிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்ட நாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய் பீம்’ படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார்.

இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது. பிரதிபலன் பாராமல்தான் அவர் இந்தக் காரியங்களெல்லாம் செய்திருக்கிறார்.

அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும்.எனது சில நிகழ்ச்சிகளில் அவர் தலைமை கண்டிருக்கிறார். ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக் கொள்வதை போல ஒரு சுயநல விசயாமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன்.

 நண்பர் ஓவியர் ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை  அவரிடம் கொடுத்து, அவரின் துணைவியாரையும் வரச் சொல்லி, திரு பாரதிராஜா, திரு பாக்யராஜ், பிரபு தேவா, விஜய் சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் இப்படி சிலருடன் அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது.

திரு சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பிரசேனாக இளைஞர்களுக்கு ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும். இந்த வாழ்கையில் பணத்தை மீறி, புகழை மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை. அகம் மகிழ்ந்து போகுமதில்… அப்படிப்பட்ட அக மகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள திரு சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமைய வேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக் கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி..” என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

 
Our Score