தமிழ்த் திரைப்பட நடிகர் பாண்டு காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகர் பாண்டு காலமானார்

பிரபல தமிழ்த் திரைப்பட நகைச்சுவை-குணச்சித்திர நடிகரான பாண்டு இன்று அதிகாலை சென்னையில் காலமானர். அவருக்கு வயது 74.

கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்கள். அந்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. தற்போது அவரது மனைவி மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு தமிழில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ‘கடல் மீன்கள்’, ‘நடிகன்’, ‘சின்னத்தம்பி’, ‘என் உயிர் கண்ணம்மா’, ‘தாலாட்டு கேக்குதம்மா’, ‘ரிக்ஷா மாமா’, ‘இது நம்ம பூமி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘அரண்மனை காவலன்’, ‘நாட்டாமை’, ‘முறை மாப்பிள்ளை’, ‘உள்ளத்தை அள்ளித் தா’ என்று 1990-2000-களில் பல முக்கிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், ‘அழகி’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘வில்லன்’, ‘காதல் கோட்டை’, ‘கில்லி’, ‘மீசை மாதவன்’, ‘வரலாறு’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சிங்கம்’, ‘உத்தமபுத்திரன்’, ‘சிகரம் தொடு’, ‘வாலிப ராஜா’, ‘நாரதன்’, ‘காஞ்சனா-2’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். கடைசியாக ‘இந்த நிலை மாறும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ‘கேப்பிடல் லெட்டர்ஸ்’ எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

நடிகர் பாண்டுவின் மறைவுக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Our Score