திரைப்பட நடிகர், நடிகைகள் ஒவ்வொருவருக்கும் முதல் நாள் ஷூட்டிங் என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
அந்த அனுபவத்தை இன்றைக்குச் சொல்லும்போதும் அவர்கள் அந்தக் காலத்திற்கே மீண்டும் பயணப்பட்டது போலவே அவர்களுக்குத் தோன்றும். அப்படியொரு தருணத்தை இப்போது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் நினைவு கூர்ந்திருக்கிறார் நடிகர் ‘நிழல்கள்’ ரவி.
“என் முதல் நாள் ஷூட்டிங் 1980-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று கமல் ஸாரின் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்தது.
பாரதிராஜா ஸார் என்னை உள்ளே இருக்கும் அறைக்கு வரச் சொல்லி என் கையில் அந்தப் படத்துக்கான சம்பளத்துக்கான அட்வான்ஸ் 1001 ரூபாயைக் கொடுத்தார். ஒரு நிமிஷம் என் கண்ணெல்லாம் கலங்கிருச்சு.
“கிளீன் ஷேவ் பண்ணிட்டு வந்திருங்க..” என்றார் பாரதிராஜா. உடனேயே வெளில வந்தேன். ‘அம்புலி சலூன்’னு ஒண்ணு இருந்தது. அங்க ஷேவ் பண்ணிட்டு திரும்பவும் பாரதிராஜா முன்னாடி போய் நின்னேன்.
மணிவண்ணன் ஸார்தான் டயலாக் சொல்லிக் கொடுத்தார். “அந்தப் பொண்ணு இருக்காளே.. அவளைப் பார்த்தவுடனேயே எனக்குப் படிப்பெல்லாம் மறந்து போச்சு. அவ ஏன் என்னை அப்படிப் பார்த்தா..?” – இப்படி ரெண்டு, மூணு டயலாக்குகளைக் கொடுத்தார்கள்.
முதல் டேக்குலேயே ஓகே ஆகிருச்சு. எல்லாரும் கை தட்டுனாங்க. ஆனால் ஒரு கை தட்டல் மட்டும் தொடர்ந்துகிட்டேயிருந்துச்சு. அது யாருன்னு பார்த்தால் கமல்ஹாசன். ‘சங்கர்லால்’ படத்துல அவர் நடிக்குற வயசான கெட்டப்புல இருந்தார். ஷூட்டிங் கிளம்புற அவசரத்துலேயும் இங்க என்ன நடக்குதுன்னு பார்க்க வந்திருந்தார். பாரதிராஜா ஸார்தான் கமல்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வைச்சார்.
அப்புறம் “ஜன்னல் வழியா கீழே எட்டிப் பார்த்து, ‘ரெண்டு டீ’ன்னு சொல்லுங்க”ன்னு நடிக்கச் சொன்னார் பாரதிராஜா. அப்புறம் ‘அப்படி திரும்புங்க..’, ‘இப்படி திரும்புங்க’ன்னு எதுக்குச் சொல்றாருன்னு தெரியாமல் செய்தேன். இதெல்லாம்தான் ‘பூங்கதவே தாழ்திறவாய்’ பாடல் காட்சியில் மாண்டேஜ் காட்சியாக வந்தது.
இந்த சீனும், மாண்டேஜ் காட்சிகளும் என் முதல் நாள் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டது. இந்த ஒரு நாள்ல நான் பதற்றமா இருந்தது மாதிரி என்னிக்கும் இருந்ததில்லை.
முதல் நாள் பாரதிராஜா ஸார் கொடுத்த அந்த 1,001 ரூபாய் அட்வான்ஸ் பணத்தை ரொம்ப வருடங்களாக மிகவும் பத்திரமா பாதுகாத்து வைத்திருந்தேன். இப்போதான் 4 வருடங்களுக்கு முன்பு ‘பண மதிப்பிழப்பு திட்டம்’ கொண்டு வந்தபோதுதான் அதை மாத்தினேன்..” என்றார் நிழல்கள் ரவி.