full screen background image

“ஸார்.. அந்தப் பக்கம் திரும்பிக்குங்க. ஹீரோயின் டிரெஸ் மாத்தணும்..” – நடிகர் நாசர் அனுபவித்த சங்கடம்..!

“ஸார்.. அந்தப் பக்கம் திரும்பிக்குங்க. ஹீரோயின் டிரெஸ் மாத்தணும்..” – நடிகர் நாசர் அனுபவித்த சங்கடம்..!

“கேரவான் வசதியிருந்தால்தான் ஷூட்டிங்கிற்கே வருவோம்…” என்று குணச்சித்திர நடிகர்களே சொல்லும் காலம் இது. இவர்களே இப்படியென்றால் ஹீரோ, ஹீரோயின்களின் கேரவான் மோகம் பற்றி சொல்லவா வேண்டும்…?

1-12

நேற்று மாலை பிரசாத் லேப்பில் நடைபெற்ற ‘திட்டிவாசல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது பற்றி குறிப்பிட்டு பேசிய நடிகர் எஸ்.வீ.சேகர், தான் தயாரித்திருக்கும் ‘மணல் கயிறு’ படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பின்போது தனது மகனும், அந்தப் படத்தின் ஹீரோவுமான நடிகர் அஸ்வின் சேகர், தனக்கு கேரவான் வசதி கேட்டதாகவும், ‘தர்றேன்.. ஆனால் அதுக்குண்டான செலவை உன் சம்பளத்துல பிடிச்சிருவேன்’ என்று சொல்லி தான் அதை நிராகரித்ததாகவும் சொன்னார். “கேரவான் வசதியெல்லாம் பட்ஜெட் படங்களுக்கு தாங்காது” என்று இறுதியாக கருத்து சொல்லிவிட்டுப் போனார் எஸ்.வீ.சேகர்.

இதற்கு பின்பு பேச வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், இது பற்றி குறிப்பிட்டு பேசும்போது,. “இப்போது கேரவான் என்பது ஆர்ட்டிஸ்டுகளின் அந்தஸ்தின் குறியீடாக  இருக்கிறது. அது தவறு. அது வசதிக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

நான் நடிக்க வந்த புதிதில் அவுட்டோர் ஷூட்டிங்கில் இருக்கும்போது ஹீரோயினின் உதவியாளர், ‘ஸார் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் திரும்பிக்குங்க. மேடம் டிரெஸ் சேஞ்ச் பண்ண்ணும்’ என்பார்கள். நானும் திரும்பிக் கொள்வேன். ஹீரோயின் அப்படி மறைவாய் போய் டிரெஸ் மாத்திக்குவாங்க. எந்த வசதியும் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் இப்படித்தான் கிடைத்த வசதியை வைத்துக் கொண்டு  படப்பிடிப்புகள் நடந்தன.

ஆனால் இப்போது அப்படியில்லை. சூழல் மாறிவிட்டது. கேரவான் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் தேவையெனில் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை..” என்றார்.  

nasser-1

அவர் மேலும் ‘திட்டிவாசல்’ படத்தில் நடித்தது பற்றி பேசும்போது, “நான் மிகவும் அனுபவித்து செய்த படம் இந்த ‘திட்டிவாசல்’. முதலில் இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனேயே எனக்குப் பிடித்தது. பழங்குடியின மக்கள் பற்றி சமீபத்தில் படித்திருந்தேன். இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் சமகால அரசியல்வாதிகளாலும், பண முதலைகளாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்தக் கதை அதைத்தான் சொல்லியிருப்பதால் எனக்கு இன்னமும் பிடித்தது.

இருந்தாலும் முதலில் இந்தப் படத்தில் நான்  நடிக்க மறுத்தேன். காரணம், தொடர்ந்து 14 நாட்கள் தொடர்ச்சியாக என்னால் நாட்களை ஒதுக்க முடியாமல் இருந்தது. இடையில் வேறு, வேறு படங்கள், வேலைகள் இருந்தன.

இன்னொரு காரணம், இது சின்ன பட்ஜெட் படம். தயாரிப்பாளர் புதியவராக இருந்தார். நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். இருந்தாலும், பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும்போது, என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் இப்படி பணத்தை இழந்தவன்தான். அந்த வலி எப்படிப்பட்டது என்று எனக்கும் தெரியும்.

ஆனால் சிறு படங்கள் எடுப்பவர்கள்தான் தங்களின்  சொந்த முதலீட்டை வைத்து எடுப்பார்கள். என் மனைவியிடம் இது பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிடித்த படம் என்பதால் இதனை விடவும் முடியாமல், ’14 நாள் ஷூட்டிங்கை 12 நாட்களுக்குள்  முடிக்க முடியுமா..?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்ட பிறகுதான் இதில் நடித்தேன்.

படப்பிடிப்புக்குப் போன பிறகுதான் அங்கிருந்த யதார்த்தமான கஷ்ட சூழலை உணர்ந்தேன். எனக்கு அப்போது முதுகுவலி இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் ஒரு மலைப் பிரதேசம். அது அந்த சிட்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருந்தது. நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு செல்ல வேண்டும்  என்றால், ஒரு குறிப்பிட்ட இடம் வரையிலும் காரில் போய் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் போய்.. பிறகு காரில் ஏறி.. இப்படி மாறி மாறிப் போக வேண்டும்.

இந்தச் சிரமங்களைப் பார்த்துவிட்டு ‘வேண்டவே வேண்டாம். இங்கேயே படப்பிடிப்பு இடத்திலேயே தங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லி அங்கேயே தங்கிவிட்டேன்.

அந்தப் படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே அழகான நாட்கள். மொத்த படக் குழுவினர் 34 பேரும் ஒரே கூரையின் கீழ் தங்கியிருந்தோம். இப்படி ஒரு அற்புத அனுபவம் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை. இப்படி இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாததாகிவிட்டது. ‘வேறு வசதிகள் வேண்டுமா..?’ என்று தயாரிப்பாளர் கேட்டபோது, ‘எதுவும் வேண்டாம்’ என்றேன்.

இந்த ஷூட்டிங்கில் நான் பார்த்து நேரம் விரயமானதே இல்லை. ஒளிப்பதிவாளர் தேடித் தேடி அழகான லொகேஷன்களில் எடுப்பார். நானும் மகேந்திரனும் அப்பா மகன் போல பேசினோம். பழகினோம். அனைத்தையுமே பகிர்ந்து கொண்டோம். நானும் அவனும் அங்கேயே ஒரு ஆவணப் படமே எடுத்துவிட்டோம். எல்லாரிடமும் பேசப் பழக, பகிர அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு பெரிய படத்துக்காக இந்த நாட்களை விற்றிருந்தால் வாழ்க்கையில் இப்படியொரு அழகான நாட்களை, அற்புதமான அனுபவங்களை நான் இழந்திருப்பேன். இவர்கள் எல்லாருக்குமாகவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார் நாசர்.

விழாவில் இசையமைப்பாளர்கள் படத்தின் இரட்டை இசையமைப்பாளர்களான ஹரீஷ்- சதிஷ், ஜெர்மன் விஜய், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன், இயக்குநர்கள் ஆர். அரவிந்தராஜ். பிரவீன் காந்தி,  நடிகர்கள் மகேந்திரன், ‘மைம்’ கோபி, அஜய் ரத்னம், தீரஜ் அஜய் ரத்னம்,  வினோத் கினி, பாடகர் சிரிஷ், பாடலாசிரியர்கள் ஜெ.சதீஷ், பி.சிவமுருகன், தயாரிப்பாளர்கள்  கே.எம். கங்காதரராவ், ஜி.வெங்கட்ரமணா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முன்னதாக  தயாரிப்பாளர்  கே.3 சினி கிரியேஷன்ஸ்  ஸ்ரீநிவாஸ்ராவ் அனைவரையும் வரவேற்றார்.

Our Score