தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொண்டவருமான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஷியாம் சிங்கா ராய்’.
தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.
மறுபிறவியை மையமாகக் கொண்ட இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன்னோட்ட வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசும்போது, “நானி என் தம்பி.. ஒரு தமிழ்ப் படத்தோடு அவர் வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குநராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கிறார் நானி. அவர் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள்.
‘நிமிர்ந்து நில்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நானிதான் நடித்திருந்தார். 90 நாட்கள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தரும்.
சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தில் நடித்தேன். அவரும் எனக்கு மகள் போலதான். மிகச் சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இத்திரைப்படம் படம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.
நடிகை சாய் பல்லவி பேசும்போது, “எப்போதுமே நான் ஒரு கதையைப் படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில்தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பல தடவை இந்த மாதிரியான கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோணும்.

இந்தப் படத்தின் கதையை படிக்கும்போதும், இதைத் தமிழில் எடுக்கலாமே என்றுதான் முதலில் தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் இதனை நான்கு மொழிகளில் தயாரிக்க இருப்பதாகச் சொன்னார். அதைக் கேட்டவுடன் ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. ஒரு தமிழ்ப் படத்தைப் பார்க்கும் உணர்வை இந்தப் படம் நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்குத் தரும்.
இந்தப் படத்தில் தேவதாசிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, சில விசயங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்குத் தேவையானதைச் செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.
நடிகர் நானி பேசும்போது, “தமிழ்ப் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான ஒரு பந்தம் இருக்கிறது. அவற்றைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன்.

எல்லாப் பேட்டிகளிலும் “நான் ஏன் நடிகரானேன்..?” என்று என்னிடம் கேட்கும்போது, “கமல் சார் படங்கள், மணி சார் படங்கள்தான் அதற்குக் காரணம்…” என்று சொல்லியிருக்கிறேன். நான் கமல் சாரின் தீவிர ரசிகன்.
கமல் சார் படங்களை பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். அதனால், அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது.
அதேபோல் உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்க நான் ஆசைப்பட்டு காத்திருக்கிறேன் என்றால் அது மணிரத்னம் ஸார்தான். அவரின் தீவிர ரசிகன் நான்.
இப்போது ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பல தெலுங்கு, தமிழ்ப் படங்கள் ஹிட்டாகி வருகின்றன. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன்.
நான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். நல்ல கதை கிடைக்கும்போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம்.
நான் ‘ஈ’ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப் பெரிய அன்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாகப் போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தைச் செய்யக் காத்திருந்தேன்.
இந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் கதையைக் கேட்டபோது இதனை தமிழிலும் தயாரிக்கலாம் என்று சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தைக் கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
நான் இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுக்காக எனது உடல், எடை எதையும் மாற்றவில்லை. ஏனெனில் இரண்டு கதாப்பாத்திரங்களையும் ஒரே நேரத்தில்தான் படமாக்கினோம், படமாக்கும்போது சிறந்த அனுபவமாக இருந்தது.
கதை மேற்கு வங்காளத்தில் நடக்கும். படம் பார்க்கும்போது அது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு நிச்சயமாக முழுதாகப் புரியும்.
இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன்.…” என்றார்.