நடிகர் ‘மீசை’ முருகேசன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. பெரிய மீசை வைத்திருந்ததால் ‘மீசை’ முருகேசன் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
திரையுலகில் வாத்திய இசைக் கலைஞராக இருந்தவர் முருகேசன். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் பல்லாண்டுகள் நீடித்தவர். மோர்சிங் இசையில் விற்பன்னர். அந்த இசைக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு திறன் படைத்தவர். அது மட்டுமில்லாமல் வேறு என்னென்ன பொருட்கள் கிடைக்கிறதோ.. அதிலெல்லாம் இசையை ஒலிக்க வைத்துக் காட்டுவார். இவருடைய இசைத் திறமையை தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் அடிக்கடி பார்த்திருக்கலாம்..
‘திருமால் பெருமை’ உள்ளிட்ட பழைய படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டினார். மோகன், நதியா நடித்த ‘உயிரே உனக்காக’ படத்தில் தான் முழு நடிகரானார். அதில் சுஜாதாவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். வெகு இயல்பாக பேச்சிலேயே காமெடியை கொண்டு வந்தவர். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியான ஆர்ட்டியாகவே நடிக்கத் துவங்கினார். இப்படி தமிழில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் முருகேசன்.
விஜய்யுடன் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ படங்களில் நடித்து பிரபலமானார். விஜயகாந்துடன் ‘பெரியண்ணா’ படத்தில் நடித்தார். கடைசியாக சேரனுடன் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் நடித்தார். சமீப காலமாக வயோதிகம் காரணமாக நடிப்பதை விட்டுவிட்டார். அத்தோடு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் கொஞ்சம் நிறுத்தியிருந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. மேலும் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்திருக்கிறார்.
அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்களும் கை விரிக்க ‘மீசை’ முருகேசனை அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அவரது வீட்டிலேயே நேற்று மாலை 4 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
மரணம் அடைந்த ‘மீசை’ முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வடபழனி குமரன் காலனி வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.