full screen background image

பெப்சி அமைப்புடன் மோதும் நடிகர் மன்சூரலிகான்..!

பெப்சி அமைப்புடன் மோதும் நடிகர் மன்சூரலிகான்..!

“நடிகர் மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ் தற்போது தயாரித்து வரும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், அல்லது இதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் எந்தவொரு திரைப்படத் தயாரிப்பின்போதும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக் கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்தும் வேலை வாங்கிக் கொள்ளலாம். எந்தப் புதிய தொழிலாளிகளை வைத்தும் படத்தை ஆரம்பிக்கலாம்.. படத்தை முடிக்கலாம், ஷுட்டிங் நடத்தலாம்..” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மௌமிதா சௌத்ரி, பூவிஷா, சஹானா இவர்களுடன் மன்சூரலிகான் நடித்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘அதிரடி.’ “இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது பெப்ஸி அமைப்பின் நிர்வாகிகள் தலையிட்டு ஷூட்டிங்கை நிறுத்தி தொல்லை கொடுத்ததால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது..” என்று நடிகர் மன்சூரலிகான் விளக்கம் கொடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது இதுதான் :

MANSOOR-2

“என்னுடைய ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம், தற்போது ‘அதிரடி’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. அதில் நான் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இந்த படத்தை 2 கட்டமாக படமாக்க முடிவு செய்து, பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இதற்கிடையில், அண்மையில் நடந்த தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக சங்க நடவடிக்கையை பயன்படுத்துவதையும் கடுமையாக எதிர்த்து இருந்தேன். இதனால், திரையுலகைச் சேர்ந்த சிலர் என் மீது பகை கொண்டனர்.

கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 11–ந் தேதி முதல்கட்டப் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம், வீராபுரத்தில் நடந்தது. அப்போது, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின்(பெப்சியின்) நிர்வாகிகள் அங்கு வந்து, படப்பிடிப்பை நிறுத்தினார்கள். படத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழில் நுட்ப கலைஞர்களை மிரட்டி, அங்கிருந்து வெளியேற்றினார்கள். திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், அன்று மட்டும் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர், கடந்த பிப்ரவரி 28–ந் தேதி இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியபோது, தொழில் நுட்ப கலைஞர்கள் யாரும் வரவில்லை. இது குறித்து படத்தின் தயாரிப்பு மேலாளர் இளங்கோவனிடம் கேட்ட போது, ‘பெப்சி’ அமைப்பின் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், தொழில் நுட்ப கலைஞர்கள் யாரும் படப்பிடிப்புக்கு செல்லக் கூடாது என்று மிரட்டி வைத்துள்ளதாக கூறினார்.

மேலும் கே.ஆர்.செல்வராஜ் என்னை தொடர்பு கொண்டு, பெப்சி சங்கத்தை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் யாரும் படப்பிடிப்புக்கு பணிக்கு வர மாட்டார்கள் என்றும், பெப்சி சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும் கூறினார்.

காரணம் எதுவுமின்றி எனது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், எனக்கு இதுவரை 25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை, பெப்சி அமைப்பிடம் இருந்து பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இது தவிர, என்னுடைய நிறுவனம் இந்த படம் மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் பல படங்களை தயாரிக்கும்.  இந்த தொழில் சங்க நிர்வாகிகளால் ஏற்படும் முட்டுக்கட்டையால் என் தொழில் பாதிக்கப்படும்.

எனவே, ராஜ் கென்னடி என்ற என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘அதிரடி’ என்ற படத்தையும், எதிர்காலத்தில் என் நிறுவனம் தயாரிக்கும் வேறு திரைப்படங்களுக்கும் இடையூறு ஏற்படுத்த ‘பெப்சி’ அமைப்புக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

பெப்சி அமைப்பில் உறுப்பினர்கள் இல்லாத தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு நான் படப்பிடிப்பு பணியில் ஈடுபடும்போது, அதை தடுப்பதற்கு பெப்சி அமைப்புக்கும், அதன் நிர்வாகிகளுக்கும், அந்த அமைப்பின் பெயரை சொல்லி வருபவர்களுக்கும் தடை விதிக்கவேண்டும்.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான 25 லட்சத்தை பெப்சி அமைப்பு, அதன் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், உறுப்பினர்கள் டிஸ்கோ பாபு, காஸ்டீயூம் மூர்த்தி ஆகியோர் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்..” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.முரளிகுமரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் மன்சூர் அலிகான் தயாரித்து நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் படப்பிடிப்பு பணியில் பெப்சி அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் தலையிட இடைக்கால தடை விதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

MANSOOR-1

இது பற்றி மன்சூரலிகான் பேட்டியளித்தபோது, “கடந்த பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து மார்ச் 27-ம் தேதிவரைக்கும் ஒரு மாதம் ஷெட்யூல் போட்டு, ஹீரோயினை வரவழைத்து, மும்பையில் இருந்து வில்லனை வரவழைத்து, லாட்ஜ்ல ரூம் போட்டு, ஒன்றரை மாதமாக ஒருங்கிணைத்து, அட்வான்ஸ் கொடுத்து, காமிராவுக்கு, ஆர்ட் டைரக்டருக்கு, டைரக்டருக்கு எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, பெப்ஸி ஆட்களை வைச்சிட்டுத்தான் ஷுட்டிங் போனேன்.

120 பேர் வரைக்கும் ஷுட்டிங் போனோம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில ஷுட்டிங்.   27-ம் தேதி பாடல் ஷுட்டிங்.. 28-ம் தேதி காலை 5.30 மணிக்கு தொழிலாளர்கள் ஷுட்டிங்கிற்கு வர மாட்டோம்னு சொன்னாங்க. யாரும் வர மாட்டோம், மன்சூரலிகான் மன்னிப்புக் கேட்கணும்னு சொன்னாங்க.

நான் ஆயிரக்கணக்கான தொழிலாளிக்கு வேலை கொடுக்கறவன். மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து ராதாரவி ஷுட்டிங்கில கேரவன் கேட்டாங்க. மேக்கப்மேனுக்கு தனி கார் வேணும், காஸ்ட்யூமருக்கு தனி கார் வேணும்னு கேட்டாங்க. ‘அதெல்லாம் முடியாது.. உங்க காசுல தனியா வாங்கிக்குங்க. 8000, 10,000-ம்னு சம்பளம் வாங்குறீங்க, 50,000, 75000-ம்னு சம்பளம் கொடுக்கறேன். மேக்கப்புக்கு ஆள் சரியா இருக்கு’ன்னு சொன்னேன். ‘புரொடக்சனுக்கு ஆள் கம்மியா இருக்கு’ன்னு சொல்லி புரொடக்சன் ஆளுங்களுக்கு போன் போட்டு வர வச்சாங்க.

அவங்க தயாரிப்பாளரா என்னை பார்த்திருக்கணும், நான் தொழிலாளர்அமைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் பெப்ஸி அமைப்புல பல வருஷம் இருந்திருக்கேன். நான் ஒரு டான்சர். டான்ஸ் மாஸ்டர் கார்டு வச்சிருக்கேன். சினி டான்சர், சினி டான்ஸ் மாஸ்டர் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன். சினி மியூசிஷியன்ல மெம்பர். ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ல லைப் மெம்பர். ஆர்ட்டிஸ்ட் அண்ட் டப்பிங் யூனியன்ல மெம்பர். 1988-ல இருந்து தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர். பிலிம் சேம்பர்ல மெம்பர். நானும் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவன்தான்.

பெப்ஸியின் இப்போதைய தலைமை நிர்வாகத்தில் உள்ள சில புல்லுருவிகள் தவறான வழிகாட்டி, அவங்க சுயநலத்துக்காக என்னை தப்பா பணிய வைக்கப் பார்த்தாங்க, நான் பணிஞ்சு போறவன் கிடையாது. சிவா, நடிகர் சங்கத்துல ராதாரவியோட வலது கை, இடது கைன்னு சொல்லப்படற கே.ஆர்.செல்வராஜ் இருக்கலாம். அவர்கிட்ட பேசச் சொன்னாங்க. நான் எதுக்குப் பேசணும்.. நான் பேச மாட்டேன்னு சொன்னேன். சிவாகிட்ட பேசச் சொன்னாங்க. சரின்னு காலையில 5.30 மணிக்கு போன் அடிச்சி சிவாகிட்ட பேசினேன். அன்னைக்கு எனக்கு தொண்டை ரொம்ப கம்மியிருந்தது. கேட்டாரு, ‘மன்சூரலிகான் பேசுறேன்’னேன். அப்படியே போனை வச்சிட்டாரு. அதுக்கப்புறம் அவர் எடுக்கவேயில்லை.

அதுக்கப்புறம் நான் எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் பேக்கப் பண்ணி அனுப்பிட்டேன். அன்னைக்கு ஷுட்டிங் கேன்சல், அதுக்கு நஷ்டஈடா 25 லட்சம் ரூபாய் கேட்டிருக்கேன். அதுக்கான எல்லா செலவினங்களையும் நீதிமன்றத்துல தாக்கல் பண்ணியிருக்கேன்.  அவங்க இழப்பீடு தந்தே ஆகணும். நான் அவங்களை சும்மாவிட மாட்டேன்..” என்றார் கொதிப்புடன்..!

Our Score