full screen background image

“வரிவிலக்கு அளிக்க லஞ்சம் வாங்கிய அமைச்சர்..” – நடிகர் மன்சூரலிகான் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“வரிவிலக்கு அளிக்க லஞ்சம் வாங்கிய அமைச்சர்..” – நடிகர் மன்சூரலிகான் பகிரங்கக் குற்றச்சாட்டு.

A.P.K. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘உறுதி கொள்.’ 

‘கோலிசோடா’ படத்தில் நடித்த கிஷோர் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்ச் சினிமாவுலகத்தை சூழ்ந்திருக்கும் தற்போதைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசப்பட்டன.

IMG_0567

நடிகர் ஆரி பேசுகையில், “கமலஹாசன் ஸார் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும். இதையே டிஜிட்டல் வடிவத்தில் டி.டி.ஹெச்., கேபிள் டிவி என்று வேறு வழிகளில் தயாரிப்பாளர் சங்கமே வெளியிட்டால், தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமாக பலனளிக்கும்.

தமிழகத்தில் இருக்கும் படம் பார்க்கும் ஆர்வமுள்ள 1 கோடி பேரிடம் தலா 100 ரூபாய் வாங்கிக் கொண்டு புதிய படங்களை ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியிலேயே பார்ப்பதுபோல ஒரு செட்டப்பை நாம் துவக்கினால் நிச்சயமாக அது வெற்றியடையும். தயாரிப்பாளர் சங்கம் இதற்காக ஒரு அப்ளிகேஷனை துவங்கி அதன் மூலமாக படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்..” என்றார்.

IMG_0553

இதன் பின்பு பேசிய நடிகர் மன்சூரலிகான், “தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள்தான் சினிமாவை அழிக்கிறார்கள்.

இப்போது விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி.க்காரங்க ஏதோ படி அளக்கிறாங்க.  அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.

ஆனால் கமல் ஸார் மாதிரி சாதனை கலைஞர் இது நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9 டூ 10 மணிவரையிலும் ஒளிபரப்பாகிறது. இதனால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டத்தில் பெரும் பகுதியினர் வராமல் போகிறார்கள். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை மீண்டும் மறுஒளிபரப்பாகிறது. அதனால் காலை காட்சிகளில் படம் பார்க்க நினைப்பவர்களில் பெரும்பாலோர் இப்போது வருவதில்லை.. ஆக நான்கு காட்சிகளிலுமே கூட்டம் குறையத் துவங்கிவிட்டது.

நாளை கமல் ஸாரின் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்தால் என்னாகும் என்று கமல் ஸார் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

IMG_0589

இப்போது ஜி.எஸ்.டி. பிரச்சினை நாடு முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நம்ம மோடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் டிரெஸ்ஸை மாட்டிக்கிட்டு நாடு, நாடா சுத்திக்கிட்டிருக்காரு. நமக்கு ஜி.எஸ்.டி.யா 28 சதவிகிதமும், கூடுதலாக கேளிக்கை வரியா 30 சதவிகிதமும் இருக்கு. இப்படி பார்த்தால் ஒரு டிக்கெட்டுக்கு கிடைக்கும் பணத்தில் 58 சதவிகிதத்தை வரியாவே கட்ட வேண்டி வரும். அப்புறம் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்..?

இப்பவே எல்லா தயாரிப்பாளர்களும் பிச்சைதான் எடுத்துக்கிட்டிருக்காங்க. எந்தப் படமும்  போட்ட முதல எடுக்க முடியல. இந்த லட்சணத்துல இத்தனை வரியை போட்டா தமிழ்த் திரையுலகம் எப்படி தாங்கும்..?

தமிழில் தலைப்பு வைத்தால், சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் வாங்கினால் வரிவிலக்குன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதுலேயும் நிறைய கோலுமாலு. காசை வாங்கிட்டுத்தான் வரிவிலக்கு கொடுத்திருக்காங்க. நான் வெளிப்படையாவே சொல்றேன்.. தம்பி ராமையா மகன் ஹீரோவா நடித்த ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்துக்கு 4.50 லட்சம் ரூபாயை லஞ்சமா வாங்கினாங்க. ‘வனமகன்’ படத்துக்கு 12 லட்சம் வாங்கியிருக்காரு மினிஸ்டர் வேலுமணி. ‘காற்று வெளியிடை’ படத்துக்கு ஒரு கோடி பேரம் பேசி 60 லட்சம் ரூபாயை வாங்கிட்டுத்தான் வரிவிலக்கு கொடுத்திருக்காங்க.

மக்களுக்கு நல்லது செய்யணும்னு உங்களை தேர்ந்தெடுத்தா இப்படி கொள்ளையடிக்கிறீங்களே இதென்ன மொள்ளமாரித்தனம்..? இதுக்கு பேசாம எங்கேயாவது போய் பிச்சையெடுத்து சாப்பிடலாமே..?” என்று பொரிந்து தள்ளினார்.

விழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் அய்யப்பன், பழனி, இயக்குநர் அய்யனார் வரவேற்றனர். விழாவில் முனீஸ்காந்த், அபி சரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலரும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score