மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனனும், பொதுச் செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
31 வருட கால பாரம்பரியமிக்க அம்மா அமைப்பிற்கு தலைவராகவும், செயலாளராகவும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
‘அம்மா’ அமைப்பில் இருக்கும் நடிகைகள் அனைவரும் இதைக் கொண்டாடி வரும் நேரத்தில் மலையாள சினிமாவின் மூத்த நடிகரான கொல்லம் துளசி இந்த வெற்றியைக் கிண்டல் செய்து பேசியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி, “அம்மா’ அமைப்பில் இனிமேல் பெண்கள்தான் ஆட்சி செய்வார்கள் என்கிறார்கள். நாங்கள் ஆண்கள் ஆட்சி செய்வார்கள் என்கிறோம். என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும். ஆண்கள் ஆட்சி செய்ய வேண்டும் இல்லையா? பெண்கள் எப்போதும் நமக்குக் கீழாகத்தான் இருக்க வேண்டும். இல்லையா? ஆண்கள் எப்போதும் பெண்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையா?” என்று பேசியுள்ளார்.
இவரது பேச்சு பெண் வெறுப்பு என்று மலையாளத் திரையுலகில் பரவலாக விமர்சிக்கப்பட்டவுடன் பின்னர், மீண்டும் பேசிய நடிகர் கொல்லம் துளசி “இப்போது அவர்கள் என் எதிரிகளாக மாறப் போகிறார்கள். நான் நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன். வேறொன்றுமில்லை…” என்று சமாளித்துள்ளார்.









