நகைச்சுவை, குணச்சித்திரம் என இரண்டிலும் ஜொலிப்பவர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அந்த வகையில் இந்த இரண்டு வகை கதாபாத்திரங்களிலும் நடித்துத் தன் திறமையை நிரூபித்து பாராட்டுக்களைப் பெற்று வருபவர் நடிகர் கருணாகரன்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல பாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்களிடம் தனக்கென தனித்த ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘பயணிகள் கவனிக்கவும்’ அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இது குறித்து நடிகர் கருணாகரன் பேசும்போது, “திரைத்துறை மீதான காதலில் ஒரு ஆர்வமுள்ள நடிகராக, நான் திரைத்துறையில் எனது பயணத்தைத் தொடங்கினேன்.
அதற்கு ஈடாக திரைத்துறை நண்பர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக சகோதரத்துவ நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது.
2 வருட துரதிர்ஷ்டவசமான கட்டத்திற்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் ஆரவாரத்துடன், மக்கள் கூட்டம் மற்றும் கொண்டாட்டங்களால் நிரம்பியிருப்பதைப் பார்த்தபோது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
நான் நடித்து அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய படைப்புகளாக இருக்கின்றன. இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானதாகவும் கதையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் உள்ளன.
‘பன்னிக்குட்டி’, ‘காட்டேரி’, ‘ஜிவி-2’, ‘காசேதான் கடவுளடா’, ‘அயலான்’, ‘நாகா’ என்ற அந்தப் படங்கள் என் நடிப்பு திறமையை வழங்குவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தன.
என்னுடைய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸுக்கு தயாராகி வருவதை கண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் திரை வாழ்வில் எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.