நடிகர் கார்த்தி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி தனது மன்ற நிர்வாகிகளின் மூலமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கை இதுதான் :
தலைமை நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்!
வரும் மே-25ம் தேதி கார்த்தி அண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரத்த தானம், அன்ன தானம், கண் தானம், நீர், மோர் பந்தல்கள், குடி தண்ணீர் பந்தல்கள் அமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பைகள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.
அதை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவதும், முறையான முன் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்வதும் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் நிகழ்வுகள் ஆகும்.
இத்தகைய செயல்கள் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும், கார்த்தி அண்ணன் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காத வகையிலும் இருக்கவேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
நேற்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் இரண்டு மாபெரும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கார்த்தி அண்ணன் இருப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து விளக்கம் கேட்டபோது “கார்த்தி அண்ணன் அவர்கள் மேல் இருந்த அன்பின் காரணமாக இவ்வாறு செய்துவிட்டதாகவும், இனிமேல் இவ்வாறு நடக்க மாட்டோம்” என்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
இனிமேல் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக போஸ்டர்கள், பேனர்கள் டிசைன் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அந்த போஸ்டர்களில் எந்தவிதமான அரசியல், சாதி, மத, இன அடையாளங்கள் எதுவும் இடம் பெறக் கூடாது என்றும்; யாருக்கும் எந்தவித மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தாதவகையில் போஸ்டர் டிசைன்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த அறிவிப்பை மீறி நடக்கும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று குறிப்பிட்டுள்ளனர்.