full screen background image

“கே.பி. ஒரு கொடை வள்ளல் – ஒரு மகனாக அவரது பணிகளைத் தொடர்வேன்..” – நடிகர் கமல்ஹாசனின் அஞ்சலி..

“கே.பி. ஒரு கொடை வள்ளல் – ஒரு மகனாக அவரது பணிகளைத் தொடர்வேன்..” – நடிகர் கமல்ஹாசனின் அஞ்சலி..

‘உத்தமவில்லன்’ பட வேலைகளுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

“பாலசந்தரின் இறுதி அஞ்சலிக்குக்கூட வர முடியாதபடி அவர் கற்றுக் கொடுத்த சினிமா வேலைகளில் ஈடுபட்டிருப்பதே அவருக்கு தான் செலுத்தும் இறுதி அஞ்சலிதான்..” என கமல் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ செய்தி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

நேற்று முன் தினம் இரவு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள பாலசந்தரின் வீட்டுக்கு நடிகை கவுதமியுடன் சென்றார். அங்கு பாலசந்தர் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அவரது உருவப் படத்துக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, “அடையாளம் தெரியாத என் முகத்துக்கு முதலில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்வதற்காக, இந்த வீட்டுக்கு முன்பு வந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். என்னுடைய பதினேழரை வயதில் அவருடன் பணி புரியத் தொடங்கினேன். 36 படங்களில் அவருடன் பணி புரிந்திருக்கிறேன். என் தந்தையுடன் இருந்ததைவிட, வாழ்க்கையில் அதிக நாட்கள் அவருடன்தான் இருந்திருக்கிறேன். என் வாழ்க்கையின் முக்கியமான 10 வருடங்களின் அத்தனை நாட்களும் அவருடன் இருந்திருக்கிறேன்.

தமிழ் சினிமாவின்  கொடை வள்ளல் அவர். என் ஆசான் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ‘அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது’ என்கிறார்கள். அப்படி விட முடியாது. ஈடு செய்தே ஆக வேண்டும். அவர் முழுமையான உருவகமாக இல்லை. அவரால் உருவாக்கப்பட்ட என்னைப் போன்ற பலரிடம் அவர் இருக்கிறார். அவருடைய திறமைகளை ஒரு கொடையாக எங்களிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

இங்கே காலதாமதமாக பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்று வந்திருந்தால்கூட இவ்வளவு பேசியிருக்க முடியாது. அழுதிருப்பேன். அழுது முடித்துவிட்டதால், இப்போது பேசுகிறேன்.

ஒரு தந்தைக்கு மகன் செய்யும் கடமையைப்போல், அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வோம்..” என்றார் கமல்ஹாசன்.

Our Score