மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த ‘த்ரிஷ்யம்’ என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் கமல்ஹாசன்-கவுதமி நடித்த ‘பாபநாச’ம் என்ற தமிழ்த் திரைப்படம். மலையாளத்தில் கதை எழுதி இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்புதான் தமிழ்ப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதிலும் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நேற்று சினிமா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கேள்வி பதில் சீஸனாக நடந்த அந்த சந்திப்பின் சுருக்கம் இது :
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்..?
“நல்ல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இப்படத்தை நான் தேர்ந்தெடுத்தேன். மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி பின்னர் தெலுங்கு, கன்னடம் என்று 3 மொழிகளிலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம் இது. சில நல்ல கதைகள் தானாக என்னை வந்து சேரும்.. அப்படி வந்த படமே இந்த ‘பாபநாசம்’. தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாபநாசம் படம் வெளியாகவுள்ளது.
இது இன்னொரு ‘மகாநதி’யா..?
‘பாபநாசம்’ புகைப்படங்களைப் பார்த்து விட்டு ‘மகாநதி’ மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அது ஒரு மாதிரியான நோக்கு. இது வேறு விதமான நோக்கு. வேட்டி கட்டி ஒரு படத்தில் நடித்து விட்டால், வேட்டி கட்டுகிற படம் எல்லாம் அந்தப் படம் ஆகிவிடாது. அதனோடு இதனை ஒப்பிடாதீர்கள்.
சினிமாவில் சில விஷயங்களை வெளியில் இருப்பவர்கள் கூறும்போதுதான் எனக்கு தெரிந்தது. `ஏழை படும் பாடு` படத்தின் பாதிப்பு வெகுவாக ‘மகாநதி’யில் இருக்கும். அந்தப் படத்தின் சாராம்சத்தைக் கொண்டு ‘மகாநதி’யாக மாற்றினேன். ஒரு தனி மனித வாழ்க்கை எப்படி சிதைந்து மீண்டும் எப்படி ஒன்றுபடுகிறது என்பதுதான் படத்தின் களம். நான் எடுக்கும்போது பாத்திரங்களுக்கு நதியின் பெயரை வைத்து மாற்றினேன்.
கெளதமியை படத்தில் நடிக்க வைக்க நீங்கள்தான் காரணமா..?
இயக்குநர் ஜூத்து ஜோசப்தான் காரணம். படத்தில் மீனா கேரக்டரில் கெளதமியையே நடிக்க வைக்கலாம் என்றார். எனக்கு ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. பிறகு தயாரிப்பாளரும், எழுத்தாளர் ஜெயமோகன் என்று எல்லோரும் சொல்லவே நானும் கவுதமியிடம் கேட்டேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு அவர் ஒப்புக் கொண்டார். இப்போது படத்தை பார்த்தபோது எல்லோருடைய முடிவும் சரியாகவே இருந்தது. அந்த அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார் கெளதமி.
நிஜ வாழ்க்கையில் இரண்டு மகளுக்கு அப்பவானா நீங்கள், இந்தப் படத்தில் நடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்..?
நான் எப்போதும் என்னை என் குடும்பத்தின் தலைவனாக நினைத்ததில்லை. ஆனால், என் குடும்பத்தின் தலைவன், தொண்டன் இரண்டுமே நான்தான். ஐந்து வருடங்களுக்கு அரசியல் தலைமை மாறுவதுபோல அந்தந்த சமயத்திற்கு ஏற்ப தலைமையை விஷயம் தெரிந்தவர்களிடம் மாற்றிக் கொடுக்க வேண்டியது அவசியம். சமைக்கத் தெரிந்தவர்களிடம் சமையல் வேலை ஒப்படைப்பது சாப்பிடுபவர்களை கேட்டுத்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
பாபநாசத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் எடுத்தது ஏன்..?
இந்தப் படத்தை வட ஆற்காரு, தென் ஆற்காடு பகுதி கதைக்களங்களாக காட்டியிருக்கலாம்தான். ‘தேவர் மகன்’ படத்தை கோயம்புத்தூர் பகுதியாகத்தான் காட்ட நினைத்தோம். நிஜமாகவே அங்குதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அது வேறு விஷயம். ‘வசூல்ராஜா’ படத்தைக்கூட அப்படி எடுத்திருக்கலாம். படத்தின் துவக்க நேரத்தில் யோசித்ததில் இந்த பாபநாசத்தில் எடுக்க வேண்டும் என தோன்றியதால் எடுத்தோம்.
படப்பிடிப்பின்போது நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமியை சந்தித்தீர்களாமே..?
‘பாபநாசம்’ படப்பிடிப்புக்கு இடம் தந்து பெரிதும் உதவியவர் இவரே. அவருக்கு நன்றி தெர்விப்பதற்காக சென்று பார்த்தேன். இதில் மதம் முன்னிலைப்படுத்தவில்லை. மனிதம்தான் முக்கியம். எல்லோரையும் மனிதராக மட்டும்தான் பார்க்கிறேன். அதில் ஜீயரோ, ஐயரோ என்றெல்லாம் பார்க்கமாட்டேன்.
பாலியல் குற்றங்கள் சார்ந்த படமே ‘பாபநாசம்’. அதைப் பற்றி உங்கள் கருத்து..?
இதைத் தடுக்க வேண்டிய கடமை நாம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. குப்பையைப் போடக் கூடாது என்பதற்கே அந்த விஷயத்தை பிரதமரே கையிலெடுக்க வேண்டியிருக்கு. காரணம், நாம நம் கடமையை செய்யவில்லையென்பதால்தான், இதை அவர் சொல்லித்தான் நாம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. ஹரப்பா, மொஹஞ்சதோராவில் குப்பைத் தொட்டி வைத்த நம் பரம்பரை இதை மறந்துவிட்டது பெரிய சோகம்தான்.
ஒரு பெண் நள்ளிரவில் நகை அணிந்துகூட அல்ல.. தன்னுடைய பாய் பிரெண்ட்டோடு போனதற்கே பஸ்ஸில் வைத்து கற்பழிக்கிறார்கள் என்றால் காந்தியார் சொன்ன சுதந்திரம் இன்னும் வரவே இல்லை என்றுதானே அர்த்தம்..? ஒவ்வொருவரும் தானாக திருந்தினால்தான் இக்குற்றங்கள் குறையும்.
இதைத் தடுக்க கடும் தண்டனை வேண்டும் என்கிறீர்களா?
கடும் தண்டனை என்பது மரண தண்டனை. நான் மரண தண்டனையை ஆதரிப்பது இல்லை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்காலில் இட்டதையும் நீதியாக கருதமாட்டேன். ஆயுள் தண்டனையிலும் எனக்கு மறுப்பு உண்டு. மஞ்சள் கோட்டை தாண்டக் கூடாது என்று போக்குவரத்து விதி இருக்கிறது. அந்த விதியை பின்பற்றி மஞ்சள் கோட்டை தாண்டாமல் இருப்பதை, ஒவ்வொருவரும் தங்களின் கடமையாக நினைக்க வேண்டும்.
உடலை எப்படி இன்னமும் இப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள்?
என் தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்த உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பதில்லை. சிறுவயதிலேயே அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டேன். பாக்கு போடும் பழக்கம் எனக்கு உண்டு அதையும் விட்டுவிட்டேன். இப்போது புகைப்பிடிப்பதும் இல்லை.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் கடவுள் மறுப்பாளர். புராண படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து இருந்தார். நீங்களும் கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் ‘தசாவதாரம்’ படத்தில் விபூதி பூசி நடித்தீர்களே..?
என்னுடைய தனி மனித விமர்சனம் எனது படங்களில் இழையோடுமே தவிர, பாத்திரத்தை போட்டு அமுக்கி விடாது. எனக்கென ஒரு சில கொள்கைகள் இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் போற்றும் ஒரு படத்தில் நடிக்க மாட்டேன்.
ஜாதியைப் போற்றுவதுபோல் தலைப்பு இருந்தால்கூட, என்றைக்கு இந்த ஜாதியை விட்டு தொலையப் போகிறீர்கள் என்று உள்கருத்து இருக்கும். ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதி இறந்து விட்டார். ஆனால், ‘இன்னும் என்ன ஜாதி?’ என்ற பதம் வந்து கொண்டேதான் இருக்கிறது.
நீங்கள், உங்களது இலக்கிய நண்பர்களான தொ.பரமசிவம், புவியரசு போன்றவர்களின சிந்தனைகளை படமாக்க முயற்சிக்கவில்லையே..?
‘விருமாண்டி’ என்கிற படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் தொ.பரமசிவம்தான். ‘மக்களின் தெய்வங்கள்’ என்ற அவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் ‘விருமாண்டி’ எடுக்கப்பட்டது. மக்களின் தெய்வங்களை பிரித்தெடுக்கும் உரிமை இங்கே யாருக்கும் கிடையாது. அதேபோல் இன்னொரு மத்த்தவருக்கும் அந்த உரிமை கிடையாது.
‘அவன் முனீஸ்வரனை கும்பிடுறான்’னு சொல்லக் கூடாது. அப்படின்னா மொத்தமா நம்பிக்கையும் இருக்கக் கூடாது. அய்யர் வாழைப்பழம் வச்சு கும்பிட்டால், அவன் சுருட்டும், சாராயமும் வைச்சு கும்பிடுவான். இதை தவறென்று சொல்லக் கூடாது. காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்க உருகும் கண்ணப்ப நாயனாரின் பக்தியை, பக்திதான் என்று ஒத்துக் கொண்டால், இந்த பக்தியையும் நாம் அவ்வாறே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.