46 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கவுரவ உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் சென்னையில் வடபழனியில் கமலா தியேட்டர் அருகில் உள்ளது.
தமிழ், மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சங்கம் துவக்கப்பட்டது.
இந்தச் சங்கத்தில் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் என்று நான்கு பிரிவினரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
தமிழ்த் திரையுலகத்தின் அத்தனை இசைக் கலைஞர்களும் தற்போது இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்தச் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா இருக்கிறார்.
பெருமை வாய்ந்த இந்தச் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கமல்ஹாசனுக்கான சங்கத்தின் உறுப்பினர் அட்டையை சங்கத் தலைவர் தீனாவும், சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இணைந்து இன்றைக்கு கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார்கள்.
கமல்ஹாசன் நடிகர் என்பதையும் தாண்டி, பாடகர், மற்றும் பாடலாசிரியராகவும் இருக்கிறார் என்பதால் அவர் இந்தச் சங்கத்தில் இணைக்கப்பட்டது பொருத்தமானதுதான்.
நடிகர் கமல்ஹாசன் “ஞாயிறு ஒளி மழையில், பன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, நரிக் கதை, மேகம் கொட்டட்டும், விக்ரம் விக்ரம், போட்டா மடியுது, ராஜா கைய வைச்சா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கண்மணி அன்போடு, போட்டு வைத்த காதல் திட்டம், சொன்னபடி கேளு, சாந்து பொட்டு, இஞ்சி இடுப்பழகி, காசு மேல காசு வந்து..” போன்ற பல புகழ் பெற்றப் பாடல்களை பாடியிருக்கிறார்.
இதேபோல் கமல்ஹாசன் சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். விருமாண்டி படத்தின் பாடல்களை கமல்ஹாசன்தான் எழுதியிருக்கிறார். அதிலும் உன்னைவிட இந்த உலகத்துல என்ற பாடல் இன்றுவரையிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த விற்பன்னராகத் திகழும் நடிகர் கமல்ஹாசன் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்தது சாலப் பொருத்தம்தான்..!!!